என்எப்சி மீது போலீஸ் விசாரணை

நேசனல் ஃபீட்லோட் கார்பரேஷன்(என்எப்சி) நம்பிக்கை மோசடிச் செயலில்(சிபிடி) அல்லது ஏமாற்றும் செயலில் ஈடுபட்டதா என்று போலீஸ் விசாரணை செய்து வருவதை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் இன்று உறுதிப்படுத்தினார்.

வணிகக் குற்ற, புலன்விசாரணைத்துறை அவ்விசாரணையை மேற்கொண்டிருப்பதாக த ஸ்டார் ஆன் லைன் செய்தித்தளம் கூறுகிறது. 

“சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணைக்கு அழைப்போம். மக்கள் இதன் தொடர்பில் ஆருடம் கூறுவதை விடுத்து எவ்வித நெருக்குதலுமின்றி நாங்கள் விசாரணை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும்”, என்று போலீஸ் தலைவர் கேட்டுக்கொண்டதாக அது தெரிவிக்கிறது.

பக்காத்தான்-ஆதரவு என்ஜிஓவான ஜிங்கா 13, என்எப்சி பற்றி மலேசிய ஊழல்-தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்திடம் புகார் செய்ததைத் தொடர்ந்து அவ்விவகாரம் பற்றிய   விசாரணை இப்போது தொடங்கியுள்ளது.

அவ் விவகாரத்தை விசாரிப்பது தன் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல என்று கூறி எம்ஏசிசி அதனைப் போலீசின் கவனத்துக்குக் கொண்டு சென்றது.

கால்நடை வளர்ப்பிலும் இறைச்சி உற்பத்தியிலும் ஈடுபடுவதற்காக அமர்த்தப்பட்ட என்எப்சி, அரசாங்கம் அதற்குக் கொடுத்த ரிம181மில்லியன் கடனைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டதாக பிகேஆர் குற்றம் சுமத்தியதை அடுத்து அது பற்றிய சர்ச்சை தொடங்கியது.

பிகேஆர் வியூக இயக்குனர் ரஃபிசி ரம்லி, அக்கடன் தொகை ஆடம்பர கொண்டோமினியம்கள் வாங்கவும் வெளிநாட்டுப் பயணத்துக்கும், அம்னோ உயர்த்தலைவர்களுக்காகவும் செலவிடப்பட்டதாகத் தெரிவித்தார்.

முகம்மட் சாலே இஸ்மாயில் தலைவராகவுள்ள என்எப்சி, அவரின் மனைவியான மகளிர். குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலிலுக்காக ரிம26,400 செலவிட்டிருப்பதாக ரஃபிசி கூறினார்.

ஆனால், என்எப்சி-யில் தவறுகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுவதை நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் சாலே மறுத்தார். மேலும், கொண்டோமினியம் வாங்கியதை நல்லதொரு முதலீடு என்றும் அவர் நியாயப்படுத்த முனைந்தார்.

TAGS: