ஹசான் அலி சூரியனையும் தடை செய்ய வேண்டும்

இணையத்தைப் பயன்படுத்துவதையும் ஐ-போன்கள் போன்ற நவீன தொடர்பு சாதனங்களையும் முஸ்லிம்கள் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கு சட்டமியற்றப்பட வேண்டும் என ஜயிஸ் கேட்டுக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மீது ‘சூரிய சக்தியில் இயங்கும் பேசும் பைபிள்கள்’ பயன்படுத்தப்படுகின்றன.

மனிதன்: கிறிஸ்துவர்கள் கல்விச் சாதனமாக பயன்படுத்தும் அந்தப் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டு வியக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் பின் தங்கியுள்ளனர் என இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான சிலாங்கூர் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி சொல்ல வருகிறாரா ?

ஸ்டீவ் ஜாப்ஸ் இன்னும் உயிருடன் இருந்தால் எல்லா நவீன சாதனங்களையும் சோதனை செய்வதற்கே ஹசானுக்கு நேரம் போதாது.

முஸ்லிம்களை மதம் மாற்றுவதற்கு எட்டு வழிகள் இருப்பதாக அவர் கூறுகிறார். அது உண்மையில் கிறிஸ்துவர்களை அவமானப்படுத்துகிறது. காரணம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழிகள் உள்ளன. அவை அனைத்தும் “நேசம்” என்பதை அடிப்படையாகக் கொண்டவை.

மாற்றத்துக்கு வாக்களியுங்கள்: டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் மதம் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஹசான் கூறிக் கொண்டார்.

அதனை அடுத்து  சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறைக்கு தர்மசங்கடம் ஏற்படாமல் தடுக்க, வழக்குத் தொடருவதற்குப் போதுமான ஆதாரம் இல்லை என்று சிலாங்கூர் சுல்தான் அறிக்கை விடுத்து அதனைக் காப்பாற்றினார்.

ஹசான் அவர்களே உங்களையும் ஜயிஸையும் நாங்கள் இனிமேலும் நம்பத் தயாராக இல்லை.

முஸ்லிம்கள் மதம் மாறுவதை தடுப்பதற்கு அவர்களுடைய சமய நம்பிக்கையை வலுப்படுத்துவது முக்கியமாகும்.

உங்கள் முட்டாள்தனமான யோசனைகள் மூலம் இஸ்லாமிய சமயத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

பினாங்கு மரி: ஹசான் அலியும் ஜயிஸும் ஏழை முஸ்லிம்களை கவனித்திருந்தால் இது நிகழ்ந்திருக்காது.

பணக்கார முஸ்லிம்கள் ஏழையாக உள்ள சக முஸ்லிம்களுக்கு உதவத் தயாராக இல்லை. அதே வேளையில் பிஎன் அரசாங்கம், சோமாலியாவிலும் பாகிஸ்தானிலும் மற்ற நாடுகளிலும் உள்ள முஸ்லிம்களுக்கு உதவுவதிலேயே அக்கறை காட்டுகிறது.

ஆகவே தேவாலயங்களை ஏன் குறை கூற வேண்டும் ? இந்த உலகில் எதுவும் இலவசமில்லை. தேவாலயங்கள் தாங்கள் தேர்ச்சி பெற்றுள்ள துறையில் பணியாற்றுகின்றன.

சூரிய சக்தியில் இயங்கும் கையடக்க பேசும் பைபிள்களைச் செவிமடுப்பதின் மூலம் ஒருவர் முஸ்லிம் மதம் மாற முடியும் என்றால் அவரது சமய நம்பிக்கை பலவீனமாக இருக்கிறது எனப் பொருள்படும்.

எல்சியூம்: கைத் தொலைபேசிகளைத் தடை செய்யுங்கள். ஐ பாட் போன்ற சிறிய கணினிகளையும் தடை செய்யுங்கள். ஏனெனில் அவற்றைக் கொண்டு பல மொழிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும். முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இடையில் தகராற்றை ஏற்படுத்துவதே ஹசானுடைய நோக்கம்.

பிரடோ: நான் ஏற்கனவே சொன்னது போல தேசிய விலங்குக் கூட ஊழலிலிருந்து மக்களைத் திசை திருப்ப சமய சர்ச்சை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

அடையாளம் இல்லாதவன்_40c3: சூரியனுக்கு அடியில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்ள உதவுவது இணையம் ஆகும். பலவீனமானவர்கள் செல்வாக்கிற்கு பலியாகாமல் தடுக்க நாம் இணையத்தையும் தடை செய்ய  வேண்டும்.

மலேசியா மீண்டும் இருண்ட காலத்துக்குப் போவது நல்லது.

ஸ்லிம்பாய்: கிறிஸ்துவர்களாகிய நாங்கள் அமைதியாக எங்கள் சமயத்தை பின்பற்ற அனுமதியுங்கள். முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் எங்களுக்கு முற்றிலும் கிடையாது.

ஏபி சுலைமான்: நகரங்களிலும் வாழும் மக்களும் கல்வி கற்றவர்களும் அந்த அபத்தத்தை புரிந்து கொள்ள முடியும். ஆனால் பெரும்பான்மை வாக்காளர்களாகிய ஒன்றுமறியா கிராம மக்கள் அப்படி இல்லையே ?.

முக்கிய ஊடகங்கள் இந்தப் புதிய கதையைத் திரித்து கிராம மக்களுடைய உள்ளத்தில் திணித்து விடும்.

கிராமப்புற மக்களைப் பொறுத்த வரையில் ‘சமயம்’ என்று வரும் போது அவர்கள் உள்ளம் வெறுமையாகி விடும். அதனை அறிந்துள்ள ஹசான் அலி போன்றவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்களையே குறை கூற வேண்டும்.

குன்சார்க்: இப்போது தான் கிடைத்த செய்தி: முஸ்லிம்களை கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றுவதற்கு சூரிய சக்தியில் இயங்கும் கையடக்க பேசும் பைபிள்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை சூரியனைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளது.

முஸ்லிம்களை கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றுவதற்கு கிறிஸ்துவ மத போதகர்கள் சூரிய வெப்பத்தைப் பயன்படுத்துவதாக இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி நிருபர்களிடம் கூறினார்.

ஆகவே முஸ்லிம்களை மதம் மாற்றுவதற்கு சூரிய வெப்பம் ஒரு போதும் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய சிலாங்கூர் மாநில அரசாங்கம் மாநிலம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் பிரம்மாண்டமான குடையை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சுதந்திரமான நேர்மையான தேர்தல்: என் வாழ்க்கையில் கடந்த 40 ஆண்டுகளாக நான் பள்ளிவாசலிலிருந்து காலை தொழுகையைச் செவிமடுத்துக் கொண்டிருக்கிறேன். அது என்னை இஸ்லாத்துக்கு மாற்றவில்லை.