அமானா, பராமரிப்பு அரசாங்க முறைக்கு யோசனை தெரிவிக்கிறது

தேர்தலின் போது அரசுத் துறைகள் நடு நிலையாக இருப்பதை உறுதி செய்ய பராமரிப்பு அரசாங்கத்தைத் தோற்றுவிக்கலாம் என பிஎன் கூட்டணிக்குள் அமைக்கப்பட்டுள்ள அமானா என்ற புதிய நெருக்குதல் அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.

இப்போதைய நடைமுறை, பிஎன்,  அரசாங்க நிர்வாக எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கிறது என அமானா அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் காதிர் ஷேக் பாட்சிர் கூறினார்.

“இப்போதைய நடைமுறை, அரசாங்க மற்றும் பகுதி அரசாங்கத் துறைகளையும் அவற்றின் நிதி ஒதுக்கீடுகளையும் பிஎன் -னுக்கு உதவுவதற்கு அரசாங்கம் முழுமையாக பயன்படுத்திக் கொள்வது, சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கான முக்கிய முன் நிபந்தனையை மீறுவதாக அமைந்துள்ளது,” என முன்னாள் சுற்றுப்பயண அமைச்சருமான அவர் சொன்னார்.

தேர்தல் நடைமுறையை சீர்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அமானா சமர்பிக்கும் ஆறு யோசனைகளில் அதுவும் ஒன்றாகும்.

மற்ற ஐந்து பரிந்துரைகள் வருமாறு:

கூட்டரசு அரசியலமைப்புக்கு இணங்க அரசியல் கட்சிகள் அமைக்கப்படுவதற்கு முழு சுதந்திரம் வழங்குவது;

வாக்காளர் பட்டியலின் கௌரவத்தை உறுதி செய்வது. வாக்குகளுக்கு ஈடாக அந்நியர்கள் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவதை தடுப்பது;

ஒன்று கூடுவதற்கான உரிமையையும் சுதந்திரமான பிரச்சாரத்தையும் உறுதி செய்வது;

முக்கிய ஊடகங்களில் நியாயமான இடம் கிடைப்பதை உறுதி செய்வது. புதிய நாளேடுகளையும் வானொலி தொலைக்காட்சி நிலையங்களை அமைப்பதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது;

தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குகளை வாங்குவதை முற்றாகத் தடை செய்வது;

அமானா அமைப்பில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களும் பொது மக்களும் விவாதம் நடத்திய பின்னர் அந்தப் பரிந்துரைகள் உருவாக்கப்பட்டதாகவும் காதிர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அந்தப் பரிந்துரைகள் முறையாக சமர்பிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

அந்தக் குழு பணியை முடிக்கும் வரை தேர்தல் நடத்தப்படக் கூடாது

அமானா, முன்னாள் நிதி அமைச்சரும் நீண்ட கால குவா மூசாங் எம்பி-யுமான தெங்கு ரசாலி ஹம்சாவின் சிந்தனையில் உதித்ததாகும்.
 
முன்னாள் மசீச தலைவர் ஒங் தீ கியாட், முன்னாள் மஇகா துணைத் தலைவர் எஸ் சுப்ரமணியம் ஆகியோர் அமானாவில் அங்கம் பெற்றுள்ள மற்ற முக்கிய உறுப்பினர்கள் ஆவர்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழு தனது பணியை நிறைவு செய்து அதன் பரிந்துரைகள் முழுமையாக அமலாக்கப்படும் வரையில் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்றும் அமானா விரும்புவதாகவும் அவர் கூறினார்.

“அத்தகைய மனப்பூர்வமான நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு நல்ல பெயரைக் கொடுக்கும். மலேசிய சமுதாயம் மட்டுமின்றி அனைத்துலக சமூகமும் நம்மை மதிக்கும், பாராட்டும்”, என்றார் அவர்.

“தேர்தல் முறையை சீர்படுத்துவது மீது சுறுசுறுப்பான, சுதந்திரமான விவாதங்கள் நிகழ்வதாகத் தோன்றுகிறது. பிஎன் எம்பி-க்கள் கூட நல்ல யோசனைகளைத் தெரிவித்துள்ளனர்.”

“அமானா அந்த புதிய மாற்றத்தையும் சுதந்திரத்தையும் வரவேற்கிறது”, என காதிர் மேலும் குறிப்பிட்டார்.