ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிகேஆர் அரசியல் பிரிவு கூட்டம், இடைக்கால பிரதமராக துன் டாக்டர் மகாதிர் முகமத் நியமனம் செய்வதற்கான திட்டத்தை ஆதரிக்கத் தயாராக உள்ளனரா என்பதை இறுதி முடிவெடுப்பதில் தோல்வியுற்றது.
பெட்டாலிங் ஜெயா. பிகேஆர் தலைமையகத்தில், சுமார் மூன்று மணி நேர சந்திப்பிற்குப் பின்னர், செய்தியாளர் கேட்ட அக்கேள்விக்கு, பிகேஆர் கட்சியின் தலைவர் ஒருவர் ‘வாய்மூடி’ சென்றார்.
அதற்கு பதிலாக, கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபாமி ஃபாட்ஷில் முன்னதாக தயாரிக்கப்பட்டிருந்த ஓர் அறிக்கையை வாசித்தார்.
ஆனால், அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், மகாதீர் அப்பதவியில் அமர்த்தப்படுவது பற்றி எதுவும் கூறப்படவில்லை.
இருப்பினும், கடந்த வாரம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட, பிரதமர் வேட்பாளர் பற்றிய விஷயம், கலந்துரையாடப்பட்டதாக மட்டும் அந்த அறிக்கை தெரிவித்தது.
“இத்திட்டம் அதிகாரப்பூர்வமான ஒன்று அல்ல, மேலும், வரலாறு மற்றும் மறுமலர்ச்சி போராட்டத்தின் கொள்கைகள் அடிப்படையில், மலேசியாவிற்குச் சிறந்ததொன்றாக அமைவதை உறுதிப்படுத்த, பிகேஆர் அரசியல் பிரிவு, இந்த விவாதத்தைத் தொடர முடிவு செய்துள்ளது,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாதீர் அல்லது வேறொரு தலைவர் பிரதம வேட்பாளராக முன்மொழிவது பற்றி கேட்டபோது, அதைப் பற்றி கருத்துகூற அவர் மறுத்துவிட்டார், இருப்பினும், ‘பரிந்துரைகள்’ இருப்பதாக அவர் கூறினார்.
அக்கூட்டத்திற்கு முன்னதாக, பிகேஆர் வீப் தலைவர், ஜொஹாரி அப்துல், மகாதீரைப் பிரதமராகவும் வான் அஷிசாவை துணைப் பிரதமராகவும் நியமிக்க ஹராப்பான் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இருப்பினும், பிகேஆரின் அரசியல் பிரிவு உறுப்பினருமான அவர், ஹராப்பானின் பொதுத் தலைவரான அன்வார் இப்ராஹிமின் ஒப்புதலையும் பெற வேண்டும் என்றார்.
முன்னதாக, பிகேஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலியின் பெயரும் பிரதம வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்படும் என்று மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.
நேற்றைய சந்திப்பிற்கு முன்னதாக, பிகேஆர் தலைவர்கள் அந்த முன்மொழிவு பற்றி அன்வாரின் கருத்துக்களைக் கேட்டிருந்தார்களா என்பதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.
கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அன்வாருக்கு, இந்த முன்மொழிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டபோது, “விவாதித்து வருகிறோம்,” என்று மட்டுமே வான் அசிஸா கூறினார்.
இதற்கிடையே, பிகேஆர் உதவித் தலைவர் சம்சூல் இஸ்கண்டார், “அது ஜொஹாரியின் தனிப்பட்டக் கருத்து, கட்சியின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு அல்ல,” என்று கூறியுள்ளார்.