அஸ்மினை அழிக்கப்போவதாக சூளுரைத்த அவரின் சகோதரர் இரகசியங்களை அம்பலப்படுத்தப் போகிறாராம்

சிலாங்கூர்   மந்திரி   புசார்   அஸ்மின்  அலியின்   சகோதரர்   முகம்மட்  அஸ்வான்  இன்று  பிற்பகல்    கோலாலும்பூரில்   புத்ரா  உலக   வணிக   மையத்தில்   நடைபெறும்   அம்னோ   பேரவைக்கூட்டத்துக்குத்   திடீர்   வருகை   புரிந்தார்.

செய்தியாளர்களிடம்   பேசிய    அவர்  பிகேஆர்  துணைத்   தலைவரின்    ‘அந்தரங்கங்களை’   அம்பலப்படுத்தப்போவதாக   மிரட்டினார்.

“பல   ஆண்டுகளாக  அஸ்மினின்  இரகசியங்களைக்   காத்து   வந்திருக்கிறேன். இனி,  ஒவ்வொன்றாக   அவிழ்த்து  விடப் போகிறேன்”,  என்று   கூறியவர்,  “அவற்றில்  ஒன்று   கழிப்பறைச்   சம்பவம்”,  என்றார்.

“நீண்ட  காலமாகவே  அஸ்மினுக்கு   எதிராக  ஒரு   வெறுப்பு   எனக்குள்   இருந்து   வருகிறது. எங்கள்  தந்தை  நம்பி  ஒப்படைத்த  பொறுப்பை   அவர்   மறந்துவிட்டார். மந்திரி   புசாராக   இருப்பதைப்  பெரிதாக  எண்ண   வேண்டாம்.உன்னை   வீழ்த்தாமல்   விடமாட்டேன்”,  என்றார்.

அஸ்வான்  ஒரு  தொலைக்காட்சி  பிரபலம்.  திரைப்படங்களிலும்   நடித்துள்ளார்.

கடந்த  காலத்தில்   தன்  சகோதரருக்குப் பல  வகையிலும்    பக்கபலமாக   இருந்துவந்துள்ளதாக  கூறிய    அஸ்வான்,  இறுதியில்   அஸ்மின்   தன்னைக்  கைவிட்டு  விட்டதாகக்  குறிப்பிட்டார்.

“அவருக்குத்  துணையாக   நின்றதால்    மலேசிய   வானொலி, தொலைக்காட்சி (ஆர்டிஎம்)யில்    என்   வேலை   போயிற்று.

“வெற்றி  பெற்ற   பிறகு……இன்றுவரை   அவரிடமிருந்து   ஒரு   செய்திகூட  வரவில்லை”,  என்றார்.  பல    ஆண்டுகள்   வேலையில்லாமல்   இருந்து  வருவதாகவும்    சொன்னார்.

அஸ்வான்  புத்ரா   உலக  வணிக  மையத்துக்கு    வருகை  புரிந்தபோது   அவருடன்  சுங்கை   புசார்   அம்னோ    தலைவர்   ஜமால்  முகம்மட்  யூனுசும்  காணப்பட்டார்.

இதற்குமுன்  அஸ்வான்   அம்னோவுக்கு   ஆதரவாக   ஒரு  காணொளியையும்  வெளியிட்டிருந்தார்.

 

அதில்   அவர்  பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்   அல்லது   பிரதமர்துறை   துணை  அமைச்சர்    ரசாலி  இப்ராகிமைச்   சந்திக்க  விரும்புவதாகக்  கூறினார்.

“பணம்   வாங்குவதற்கோ   அவரைத்   துதி   பாடவோ   அல்ல,  சிலாங்கூரில்  அஸ்மினை  அழிக்க   மில்லியன்    யோசனை  இருக்கிறது.

“புக்கிட்   அந்தாராபங்சாவில்   மட்டுமல்ல,  கோம்பாக்கில்   மட்டுமல்ல…..என்னிடம்  பல    திட்டங்கள்   உண்டு. சொன்னால்  கைரி   ஜமாலுடின்(அம்னோ  இளைஞர்   தலைவர்)  முகம்  மலரும்.

“கைரி   மகிழ்ச்சி  கொள்வார்.  அஸ்மினை   சிலாங்கூரில்   மட்டுமல்ல   நாடு  முழுவதிலும்  அழிப்போம்”,  என்றார்.

காணொளியின்  முடிவில்  “நஜிப்   வாழ்க,    பிரதமர்   வாழ்க,  அஸ்மின்  ஒழிக”,  என்றவர்  முழங்கி  இருந்தார்.