ஸைட்டுக்கு எதிராக, சிலாங்கூர் சுல்தானுக்கு ஆதரவாக சிலாங்கூர் அம்னோ பேரணி

 

சிலாங்கூர் சுல்தானுக்கு ஆதரவு தெரிவிக்க சிலாங்கூர் அம்னோ ஒரு மக்கள் கூட்டத்தை நடத்தத் தயாராக இருக்கிறது.

சிலாங்கூர் சுல்தானை டிஎபி உறுப்பினர் ஸைட் இப்ராகிம் அவமதித்து விட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சிலாங்கூர் அம்னோ இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக அதன் தொடர்புக் குழு தலைவர் நோ ஒமார் கூறுகிறார்.

நேற்று மலேசியாகினி வெளியிட்டிருந்த ஒரு செய்தி பற்றி கருத்துரைத்த ஸைட் “சிலாங்கூர் சுல்தான் அவர் சொல்வதில் கவனமாக இருக்க வேண்டும். நாடு தீயில் எரியும் போது அதிலிருந்து யாருக்கும் பாதுகாப்பு இல்லை”, என்றார்.

பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் ஓர் ஆத்திரம் கொண்டவர். அவரது ஆத்திரத்தால் நாட்டை எரித்து விடுவார் என்று சிலாங்கூர் சுல்தான் கூறியிருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய ஸைட் இப்ராகிம் இவ்வாறு கூறினார்.

இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நோ ஒமார், சுல்தானுக்கு எதிரான ஸைட்டின் துடுக்குத்தனத்தைச் சாடினார்.

ஸைட்டின் பேச்சு முட்டாள்தனமானது மற்றும் துடுக்குத்தனமானது மட்டுமள்ள. அது சுல்தானுக்கு எதிராக இழைத்த இராஜத்துரோகம் என்று நோ ஒமார் கூறினார்.

இந்த விவகாரத்தில் அம்னோ சும்மா இருக்கப் போவதில்லை. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஷா அலாமில் சுல்தானின் அரண்மனைக்கு முன்னால் ஒரு பேரணி நடத்தப்படும். என்றாரவர்.

அதற்கும் மேலாக, ஸைட்டுக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஸைட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் புகாரும் செய்யப்படும் என்று நோ மேலும் கூறினார்.

சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலிக்கு எதிராகவும் இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். அவர் சுல்தானைவிட மகாதிருக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது என்றாரவர்.