டிசம்பர் 6, 2017 – நெகிரி செம்பிலான், பண்டார் சிரம்பான் செலாத்தான் – நடைப்பயணத்தின் 12-ம் நாள், வெயில் காரணமாக தியாகுவும் அஞ்சாதமிழனும் சீக்கிரமே களைப்படைந்ததாகக் கூறினர்.
இருப்பினும், சுமார் 6 மணி நேரம் நடந்து, 25 கிலோ மீட்டரைக் கடந்து, பண்டார் சிரம்பான் செலாத்தானை அடைந்ததாக அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
“இன்று மாலை சுமார் 4 மணியளவில், செனாவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணாவின் அலுவலகத்தை அடைந்தோம். எங்களை அங்கு, தோழர் பி.குணா, நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலர் வரவேற்றனர்,” என்று தியாகு கூறினார்.
இன்று, வரும்வழியில் பலரைச் சந்தித்து, இந்த நீண்ட நடைப்பயணத்தின் நோக்கத்தை விளக்கி, அவர்களின் கையொப்பத்தையும் இவர்கள் பெற்றுள்ளனர். பலர் தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாக இந்த இளைஞர்கள் கூறினர்.
இரவு நடந்த கலந்துரையாடலில், பலர் கலந்துகொண்டு தங்கள் ஐயங்களைத் தீர்த்துகொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
“நாங்கள் எங்கள் நடைப்பயணத்தின் நோக்கத்தை வந்தவர்களிடம் விளக்கினோம். எதிர்வரும் டிசம்பர் 11-ம் தேதி, புத்ராஜெயாவில், பிரதமரிடம் கையளிக்கவுள்ள மனுவைப் பற்றியும் கூறினோம். அன்றைய தினம் திரளாக வந்து, எங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டோம்,” என்றார் தியாகு.
மேலும், ஜனநாயகச் செயற்கட்சியின், நெகிரி செம்பிலான் மாநிலத் துணைத் தலைவருமான பி.குணசேகரன், தங்களுக்கு இப்பயணத்தின் போது பல உதவிகளைச் செய்ததோடு, தங்களுக்கு முழு ஆதரவையும் வழங்கி, ஊக்குவித்தது மகிழ்ச்சி அளித்ததாகவும் தியாகு தெரிவித்தார்.
“நாங்கள் கெமாஸ் வந்ததிலிருந்து, தோழர் குணா எங்களுக்குப் பலவகையில் உதவி வருகிறார். அதைவிட, பிரதமரிடம் நாங்கள் கொடுக்கும் மனுவில் உள்ள கோரிக்கைகளைப் பிரதமர் செயல்படுத்துகிறாரோ இல்லையோ, தான் அதனை ஈப்போ பாராட் எம்பி குலசேகரனிடம் கொடுத்து, அதன் சாரம்சங்களை நாடாளுமன்றத்தில் பேசக் கேட்டுக்கொள்வேன், என்று அவர் கூறியது எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது,” என்று இன்று, கலந்துரையாடலின் போது நடந்த விவரங்களைத் தியாகு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
அதோடுமட்டுமல்லாமல், பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்தால், அந்த மனுவில் உள்ளவற்றை நிறைவேற்ற, ஜசெக ஆவன செய்யும் என்று குணா கூறியதாகவும் தியாகு தெரிவித்தார்.
இன்றிரவு, அவர்கள் அந்த அலுவலகத்திலேயே தங்கி, ஓய்வெடுக்கவுள்ளனர். தோழர் அஞ்சாதமிழனுக்குக் காலில் வலி ஏற்பட்டுள்ளதால், நாளை சற்று ஓய்வெடுத்து, அதன்பிறகு பயணத்தைத் தொடரவுள்ளதாகவும் தியாகு தெரிவித்தார்.
மேல் விவரங்களுக்கு : – https://www.facebook.com/MotherTongueEducation/ முகநூல் பக்கம் செல்லவும்.
அவர்களைச் சந்திக்க விரும்பும் அன்பர்கள், 012 4341474 – தமிழ் இனியன் / 016 948 9218 – கௌதமன் என்ற எண்களில் அழைக்கலாம்.
- ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்