14வது பொதுத் தேர்தலுக்காக அதன் உறுப்பினர்களை ஒன்றிணைப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ள அம்னோ மலாய்க்காரர்கள் ஒன்றுபட வேண்டும் என்று முழக்கமிட்டு வருவதற்குப் பதிலாக ஒட்டுமொத்த மலேசியர்களையும் கவர்வதற்கு முனைப்புக் காட்டினால் நன்றாக இருக்கும் என பாரிசான் நேசனல் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான கெராக்கான் தலைவர் ஒருவர் மொழிந்துள்ளார்.
கெராக்கான் இளைஞர் துணைத் தலைவரான எண்டி யோங், இன்று முகநூலில் புத்ரா உலக வணிக மையத்தில் நடைபெறும் அம்னோ பொதுப்பேரவை படமொன்றைப் பதிவேற்றம் செய்திருந்தார். அப்படத்தில் பெரிய பதாதை ஒன்று காணப்படுகிறது. அதில் “Bersatu Melayu”(மலாய்க்காரர்களே ஒன்றுபடுவீர்) என்ற சுலோகம் காணப்படுகிறது.
“ஒரு அமைப்பு ‘பெர்சத்து ஈபான்’ அல்லது ‘பெர்சத்து இந்தியா’ அல்லது ‘பெர்சத்து சீனா’ அல்லது பெர்சத்து கடாசான்’ என்று எழுதப்பட்ட பதாதைகளைக் காட்சிக்கு வைத்திருந்தால் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்”, என்றார் யோங். “நான் சொல்வதைத் தப்பாக புரிந்து கொள்ளாதீர்கள். இனத்தைப் பற்றியோ சமயத்தைப் பற்றியோ நான் எதுவும் சொல்ல வரவில்லை. ‘பெர்சத்து ரக்யாட் மலேசியா(னலேசிய மக்களே ஒன்றுபடுங்கள்’ #1மலேசியா என்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றுதான் சொல்ல வந்தேன்”, என்றார்.
இதனிடையே, தேசிய விசுவாசிகள் சங்கமும் (பெர்சத்துவான் பேட்ரியோட் கெபாங்சான்) அம்னோ கட்சியினர் அவர்களின் உரைகளில் இன உணர்வுகளைத் தூண்டிவிடாமல் நாட்டு மக்களை ஒன்றிணைக்கப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.