முன்னாள் டிஏபி பிரதிநிதி 100ஆதரவாளர்களுடன் பிஏபிக்குத் தாவினார்

முன்னாள்   டிஏபி   சட்டமன்ற  பிரதிநிதி   ஒருவர்  மக்கள்   மாற்றுக்  கட்சி(பிஏபி)க்குத்    தாவியுள்ளார்.  அவர்தான்   டான்  பெங்  ஹுவாட்.  அவர்  இப்போது   அக்கட்சியின்   பினாங்கு   மாநிலத்   தொடர்புக்குழுத்    தலைவர்.

இன்று   ஜாவியில்     செய்தியாளர்களிடம்    பேசிய      அவர்,   டிஏபி  இப்போது   கட்சிக்  கொள்கைகளுக்கு   முன்னுரிமை   அளிப்பதில்லை    என்றார்.

“கட்சி   மூத்த   தலைவர்களை    மறந்து   கிட்டத்தட்ட   ஒரு   குடும்பச்  சொத்தாக   மாறிவிட்டது”,  என  முன்னாள்   ஜாவ்   சட்டமன்ற   உறுப்பினரான    அவர்  கூறினார்.

“தலைவர்கள்   ஆணவம்,   திமிர்,   செருக்கு   பிடித்து  அலைகிறார்கள்.

“பினாங்கில்  10 ஆண்டுகள்   ஆட்சி   நடத்திய  பின்னர்   இப்படிப்பட்ட   போக்கு  முற்றிப்போயுள்ளது”,  என்று   கூறிய   டான்,     2013  பொதுத்   தேர்தலில்  பிகேஆர்  10  இடங்களை  வென்றது   என்பதை    மறந்து   அதன்  பிரதிநிதி  ஒருவரைக்கூட   டிஏபி    அவமதித்து  விட்டது  என்றார்.

டிஏபியுடன்  எல்லா   தொடர்புகளையும்    துண்டித்தக்  கொண்டதன்    அடையாளமாகக்   கட்சி   உறுப்பினர்   அட்டையைத்   துண்டுத்   துண்டாக   வெட்டி  எரிந்தார்.  அத்துடன்    100  உறுப்பினர்   பாரங்களையும்   அவர்   பிஏபி   தலைவர்   சுல்கிப்ளி   முகம்மட்   நூரிடமும்  பிஏபி   துணைத்   தலைவர்   ரஹ்மாட்   இஷாக்கிடமும்   கொடுத்தார்.

பிஏபி,   டிஏபியின்  முன்னாள்   உதவித்   தலைவர்   சுல்கிப்ளி  முகம்மட்  நூர்  அமைத்த   ஒரு   கட்சி. 25  ஆண்டுகள்  அக்கட்சியில்   இருந்த   சுல்கிப்ளி  இறுதியில்   அதிருப்தியுற்று   அதிலிருந்து   வெளியேறினார். அவரைப்போன்று   டிஏபியிடம்  அதிருப்தியுற்றிருந்த  வேறு  சிலரும்   அவருடன்  சேர்ந்துகொண்டனர்.