நஜிப் : உலகம் ஒன்றுபட்டால், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அங்கீகரிக்கப்படுவது தோல்வியடையலாம்

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை உருவாக்குவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக, உலக நாடுகள் ஐக்கியப்பட்டால் அத்திட்டம் தோல்வியடையும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறினார்.

“உலகம் ஒன்றுபட்டால், இஸ்ரேலின் தலைநகரான பைத்துல்மாக்டிஸை உருவாக்குவதற்கான அமெரிக்க முன்மொழிவைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்,” என அம்னோ தலைவருமான அவர், புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறும் அம்னோ மாநாட்டில், ‘ஊடகத் துறை’யைப் பார்வையிட வந்தபோது கூறினார்.

நேற்று, அம்மாநாட்டில் தலைமை உரையாற்றிய போது,  முஸ்லீம்களின் 3 புனித நகரங்களில் ஒன்றை, இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் பரிந்துரைக்கு, மலேசியா தீவிரமாக கண்டனம் தெரிவிக்கும் என்றும்; முஸ்லிம்கள் அத்திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தான் நம்புவதாகவும் நஜிப் தெரிவித்தார்.

மலேசியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவும் இத்திட்டத்திற்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் நஜிப் சொன்னார்.

துருக்கியின் அதிபர் ரெசெப் தாய்யிப் எர்டோகன், இந்த விஷயத்தில் தனது கவலையைப் பகிர்ந்து கொள்வதற்காக, அவரைத் தொடர்பு கொண்டதாக பிரதமர் கூறினார்.

“என்னைத் தொடர்புகொண்ட உலகத் தலைவர்களுள், முதலாமவராக அவர் இருந்தார். நாங்கள் விவாதித்துக் கொண்ட விஷயங்களை, நாளை காலை எனது மாநாட்டு நிறைவுரையில் தெரிவிப்பேன், காரணம் அதில் சில பரிந்துரைகள் உள்ளன,” என்றார் நஜிப்.

எதிர்வரும் டிசம்பர் 13- ம் திகதி, சர்வதேச முஸ்லிம் நாடுகளுடன் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்க, இஸ்தான்புல்லில் நடைபெறவிருக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) அவசரக் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் மலேசியாவுக்கு எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார் என நஜிப் தெரிவித்தார்.

“அம்மாநாடு பற்றியக் கூடுதல் தகவல்களை நான் பெறுவேன். எர்டோகன் மலேசியாவின் வருகையை விரும்புகிறார். இந்தப் பெரிய விஷயத்தில், மலேசியாவின் பங்கு வெகுவாகப் பாராட்டப்படுவது இந்த அழைப்பில் இருந்தே தெரிகிறது.

“ஓர் இஸ்லாமிய அரசு என்ற வகையில், பைத்துல்மாக்டிஸைக் காப்பாற்ற, எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டியது நமக்கு மிகவும் முக்கியம்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.