புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் பங்குகளை, ஷிஜியாங் கீலி ஹோல்டிங் குரூப்-இடம் (கீலி) விற்க அனுமதியளித்த, அம்னோ தலைவர் நஜிப் இராசாக்குக்குக் கெடா அம்னோ பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துகொண்டது.
புரோட்டோன் – ஷிஜியாங்கின் ஒத்துழைப்பு, 10,000 பூமிபுத்ரா தொழிலாளர்களை வேலை இழப்பதிலிருந்து காப்பாற்றியிருக்கிறது, என்று அலோர்ஸ்டார் பிரதிநிதியான முகமட் யூசுஃப் இஸ்மாயில் கூறினார்.
“மலேசிய அரசாங்கம், சீனாவிற்குப் புரோட்டோனை விற்றுவிட்டது என எதிர்க்கட்சியினர் கதை சொன்னாலும், நஜிப்பின் அச்செயல் 10,000 மலாய், பூமிபுத்ரா தொழிலாளர்களைக் காப்பாற்றியுள்ளது,” என்றார் அவர்.
“தலைவர் இந்த விவேகமான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், புரோட்டோன் இந்நேரம் மூடப்பட்டிருக்கும். இதுபோன்ற புத்திசாலிதமான துல்லியமான நடவடிக்கைகளைத் தொடருங்கள்,” என்றும் அவர், இன்று அம்னோ மாநாட்டில் பேசினார்.
1983-ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் அவர்களால் நிறுவப்பட்ட புரோட்டோன், இலாபத்தை ஈட்டும் முயற்சியோடு வெளிநாட்டு பங்காளிகளையும் சேர்த்துகொள்வோம் என்ற நிபந்தனைகளோடு, கடந்த வருடத்தில் RM1.5 பில்லியன் அரசாங்க நிதியுதவியைப் பெற்றது.
பிரான்ஸின் பி.எஸ்.ஏ. மற்றும் ஜப்பானின் சுசுக்கி மோட்டோர்ஸ் போன்ற பெரும் நிறுவனங்கள் ஆர்வம் கொண்டபோதும், கடந்த மே 24-ல், புரோட்டோன் நிறுவனத்தின் உரிமையாளரான புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், கீலி நிறுவனத்துடன் கையெழுத்திட்டது. இதில் கீலிக்கு 49.9% பங்குகள் வழங்கப்பட்ட வேளை, புரோட்டோனுக்கு 50.1% பெரும்பான்மை பங்குகள் வைக்கப்பட்டன.
ஆகஸ்ட் 2010-இல், கீலி நிறுவனம் ஃபோர்ட் மோட்டோரிடமிருந்து வோல்வோ –ஐ வாங்கியது குறுப்பிடத்தக்கது.
இதற்கிடையே, துன் டாக்டர் மகாதிரையும் யூசுப் விமர்சித்திருந்தார், முன்னாள் பிரதமர் கெடா மாநிலத்திற்கு ஒரு பங்களிப்பையும் செய்திருக்கவில்லை என கூறினார்.
“டாக்டர் மகாதீர் 22 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்தார், கெடா மாநிலத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை அவர், ஆனால் பெக்கானில் இருந்து வந்த நம் தலைவர் (நஜிப்) , கெடாவை தீர்வை அற்ற மண்டலமாக அறிவித்தார். இது கெடா மாநிலத்தில் பொருளாதாரத்தை உருவாக்குகிறது,” என்று மேலும் அவர் கூறினார்.