இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் 14-ம் நாள்

டிசம்பர் 8, 2017 – நெகிரி செம்பிலான், லாபு – நடைப்பயணத்தின் 14-ம் நாள், அதிகாலையிலேயே இன்று லாபு நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர் தியாகு குழுவினர்.

போகும் வழியில், பொது மக்களில் பலர் அவர்களின் நடைப்பயணத்தின் நோக்கம் மற்றும் இருமொழி திட்டத்தின் விவரம் கேட்டறிந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இருமொழி திட்டத்திற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினர்.

லாபு தமிழ்ப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அம்மன் கோயிலை, மதியம் சுமார் 2 மணியளவில் வந்தடைந்ததாக தமிழ் இனியன் நம்மிடம் தெரிவித்தார். கோயிலில் அவர்களைச் செனாவாங் சட்டமன்ற உறுப்பினர் பி.குணா மற்றும் கோயில் தலைவர் திரு இலட்சுமணன் இருவரும் வரவேற்று, உபசரித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

ராசா நாடாளுமன்ற உறுப்பினர் தியோ கொக் சியோங் அவர்களைச் சந்திக்க வந்ததாகவும், அவர்களின் முயற்சிக்கு ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்தனர்.

“இன்று ராசா எம்பி தியோ எங்களை வந்து சந்தித்தார், டிஏபியைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகோல் தான் அவருடன் வந்திருந்தார். இருவரும் எங்கள் நடைப்பயணத்தின் நோக்கத்தைக் கேட்டறிந்தனர். எங்களைப் பாராட்டியதோடு, எங்களின் முயற்சிக்கு ஆதரவும் தெரிவித்தனர்.

“டொங்ஜோங் போன்ற ஓர் அமைப்பு இருந்திருந்தால், இந்நாட்டில் தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் பாதுகாப்பாக இருந்திருக்கும் என்ற எங்கள் ஆதங்கத்தை அவர்களிடம் பகிர்ந்துகொண்டோம். அவர்களுடன் டிஏபி குணாவும் இருந்தார். நீண்ட நேரம் கலந்துரையாடிய பின் அவர்கள் விடைபெற்று சென்றனர்,” என்று இனியன் இன்றைய அவர்களின் பணியை நம்மிடம் விளக்கினார்.

இன்று அதிகமான மக்கள் அவர்களை வந்து சந்தித்து விளக்கம் பெற்று சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். இது அவர்களின் தொடர் பயணத்திற்கு உத்வேகத்தை அளிப்பதாகவும் கூறினர். இதே வேகத்தோடு, இன்னும் 3 நாள்களில் புத்ரா ஜெயாவை அடைவோம் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இன்று இரவு, லாபு அம்மன் கோயிலில் அவர்கள் தங்கி ஓய்வெடுப்பர்.  நாளை, டெங்கில் பட்டணத்தை நோக்கி, அவர்கள் பயணம் தொடரும். பொது மக்கள் அவர்களை அங்குச் சென்று சந்தித்து, மேல் விவரங்கள் அறியலாம்.

மேல் விவரங்களுக்கு : – https://www.facebook.com/MotherTongueEducation/ முகநூல் பக்கம் செல்லவும்.

அவர்களைச் சந்திக்க விரும்பும் அன்பர்கள்,  012 4341474 –  தமிழ் இனியன் / 016 948 9218 – கௌதமன்  என்ற எண்களில் அழைக்கலாம்.

  • ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்