நண்பர்கள் இல்லாத ஸைட், ஸாகிட்டை சந்திக்க விரும்புகிறார்

 

சிலாங்கூர் சுல்தானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தமக்கு எதிரணித் தலைவர்கள் ஆதரவு அளிக்கத் தவறியதால் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர் இப்போது துணைப் பிரதமர் அஹமட் ஸாடகிட் ஹமிடியைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

எனது தற்போதைய இக்கட்டான நிலையில் ஆதரவு அளிக்க எனக்கு நண்பர்கள் இல்லாதது போல் தெரிகிறது என்று டிவிட் செய்துள்ள ஸைட், தருணம் கிடைத்ததும் துணைப் பிரதமர் ஸாகிட்டை சந்திக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.

இது தமது மற்றும் தமது குடும்பத்தின் பாதுகாப்பு பற்றியதாகும் என்று அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர் சுல்தான் – ஸைட் பற்றிய விவகாரத்தில் சிலாங்கூர் டிஎபியின் தலைவர் டோனி புவா, இது கட்சி சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல, ஏனென்றால ஸைட் இப்ராகிம் கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை. ஆகவே, இந்த விவகாரத்தின் பின்விளைவுகளை அவரே எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் விடுத்துள்ள அறிக்கை குறித்து கருத்துரைத்த ஸைட் இவ்வாறு கூறினார்.

இன்று  முன்னதாக,  டிஎபி உறுப்பினரான ஸைட் இப்ராகிம் சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் தம்மை சுத்தியால் தாக்கப் போவதாக விடுத்திருந்த மிரட்டலைத் தொடர்ந்து தாமும் தமது குடும்பமும் கவலையடைந்திருப்பதாகக் கூறினார்.

அவர் போலீஸ் படைத் தலைவர் முகமட் பூஸி ஹருணிடமும் பாதுகாப்பு கோரியுள்ளார்.

ஸாகிட் தெரிவித்திருந்த கருத்து பண்பில்லாதது என்றும் அவர் தம்முடன் ஒத்துப்போக முடியாது என்றால் அவர் தமது சொந்த மாநிலமான கிளந்தானுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் சிலாங்கூர் சுல்தான் கூறியிருக்கிறார்.

ஸைடுக்கு எதிராகப் போலீஸ் புகாரும் செய்யப்பட்டுள்ளது.

போலீசார் ஸைட்டை தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்கின்றனர். ஜமாலும் அவர் விடுத்த மிரட்டல் மற்றும் அவரின் கோமாளித்தனம் ஆகியவற்றுக்காக விசாரிக்கப்படுகிறார்.