ஷீலாவைத் தாக்கிப் பேசிய அம்னோ கட்சியினர் விலைவாசி உயர்வு குறித்து இப்போது அவர்களே அங்கலாய்க்கிறார்கள்

பாடகர்  ஷீலா   மஜிட்   விலைவாசி   உயர்ந்து  விட்டதாக  சொன்னபோது  அம்னோவும்  அதன்   ஆதரவாளர்களும்   சீறிப்பாய்ந்து   அவரை   உண்டு இல்லை   என்று   ஆக்கி  விட்டார்கள்.  ஆனால்   நேற்றைய  அம்னோ   பேரவையில்  அதுதான்   பேச்சாக   இருந்தது.

விலைவாசி     உயர்வு     குறித்து     பேராளர்கள்     அங்கலாய்த்துக்  கொண்டது  இன்றைய  பெரித்தா  ஹரியானில்   இரண்டு   பக்கங்களில்   வெளிவந்துள்ளது.

அம்னோ  இளைஞர்   தகவல்   தலைவர்   ஜமாவி   ஜாபார்,   உயர்ந்துவரும்   விலைவாசிக்கும்    இடைத்தரகர்கள்  பிரச்னைக்கும்   தீர்வுகாண   பணிக்குழு   ஒன்று  அமைக்கப்பட    வேண்டும்    என்று   கேட்டுக்கொண்டதாக  அறிவிக்கப்பட்டிருந்தது.  மற்றவர்கள்  விலைகளைக்  குறைக்க   உதவித்  தொகையும்  திட்டங்களும்   தேவை    என்றனர்.

கூட்டரசு  பிரதேச  பேராளர்   ரிஸால்மான்  மொக்தாரும்   விலைவாசி   உயர்வு குறித்து   முறையிட்டார்.   தங்கள்   பகுதியில்     பெட்ரோலை   இலவசமாக   வழங்குவதாகவும்    ஆனால்    தங்களுக்கே    பெட்ரோலை  வாங்குவது       சிரமமாக   உள்ளது   எனவும்  புகாரிட்டார்.

அவரது  கூற்று  நல்ல வரவேற்பைப்   பெற்றது.

பல்கலைக்கழக    மாணவர்களின்   பிரதிநிதி    அம்மார்  அட்னான்   பல்கலைக்கழக   மாணவர்களுக்கு   எரிபொருள்   உதவித்  தொகை  கொடுக்கப்பட   வேண்டும்   என்று   கேட்டுக்கொண்டார்.

“அரசாங்கம்   உதவித்  தொகை   வழங்குமானால்   அது  எங்கள்   அன்றாடச்   செலவுகள்  குறைவதற்கு   பெரிய   உதவியாக   இருக்கும்”,  என்றார்.

மற்ற  பேராளர்களும்   விலைவாசி  உயர்வைக்   குறைக்க    பல்வேறு   பரிந்துரைகளை   முன்வைத்ததாக   பெரித்தா   ஹரியான்   கூறியது.  பெர்லிஸ்   பேராளர்  அஸிஹானி   அலி,  விலைவாசி   உயர்வு   14வது   பொதுத்   தேர்தலில்   முக்கிய   விவகாரமாக   விளங்கும்    என்றார்.  நெகிரி   செம்பிலான்   பேராளர்   ஹசிம்   ருஸ்டி,   பொருள்  விலைகளைக்   குறைப்பதில்   ஃபாமா   முக்கிய   பங்காற்ற   வேண்டும்  எனக்  கேட்டுக்கொண்டார்.