இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் 15-ம் நாள், சிலாங்கூரில்

டிசம்பர் 9, 2017 – சிலாங்கூர், சாலாக் திங்கி – நடைப்பயணத்தின் 15-ம் நாள், இன்று காலை 7.30 மணியளவில் நெகிரி செம்பிலான், லாபுவில் இருந்து சிலாங்கூரை நோக்கி நடக்கத் தொடங்கியதாக, நாம் தொடர்பு கொண்டபோது தியாகு தெரிவித்தார்.

சுமார் 16 கிலோமீட்டர் நடந்து, 2 மணியளவில் சாலாக் திங்கியை அடைந்துள்ளனர். அவர்களை அங்கு, நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் மற்றும் பிகேஆர் சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவு துணைத் தலைவர் தீபன் மற்றும் பொது மக்கள் வரவேற்றுள்ளனர்.

அங்கு நடந்த கலந்துரையாடலின்போது, அறிவியல் – கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் பயில்வதால் மட்டும், தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஆங்கிலப் புலமை வளர்ந்துவிடாது என்று தீபன் தெரிவித்ததாக தியாகு நம்மிடம் கூறினார்.

பிகேஆர் தீபன், “மாணவர்களிடையே, குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஆங்கில ஆளுமையை மேம்படுத்த, அரசாங்கம் பரிந்துரைக்கும் திட்டங்களுக்கு நாங்கள் ஒருபோதும் மறுப்பு தெரிவிக்க மாட்டோம். ஆனால், அதற்கு டிஎல்பி ஒரு முறையல்ல. இத்திட்டத்தால் மாணவர் மத்தியில் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த முடியாது என்று சொன்னார்,” என்றார் தியாகு.

இன்று தமிழ்ப்பள்ளிகளில், ஆங்கிலம் போதிக்கும் பெரும்பான்மை ஆசிரியர்கள் அம்மொழியில் பயிற்சி பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலத் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் மாணவர்கள், அம்மொழியில் எப்படி சிறந்துவிளங்க முடியும்? என்று தீபன் கேள்வி எழுப்பியதாக தியாகு தெரிவித்தார்.

மேலும், இப்பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்துவரும் ஒன்று, இதற்கு தீர்வு காணாமல், ஆங்கில ஆளுமையை அதிகரிக்க அறிவியல் – கணிதம் ஆங்கிலத்தில் போதிக்கப்படும் என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது என்றும் அவர் கேட்டதாக தியாகு கூறினார்.

இன்று, அவர்களுடன் சுமார் 6 கிமீ தூரம் நடந்துவந்த தீபன், அரசாங்கத்தின் இத்திட்டம் சரியானதொன்று அல்ல, காலபோக்கில் நம் மாணவர்கள் மொழி விளங்காமல், அறிவியல் – கணிதப் பாடங்களிலும் பின்னடைவு காண வாய்ப்புள்ளது என்றும், தீபன் தெரிவித்ததாக தியாகு கூறினார்.

இவர்களின் பயணத்திற்கு நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். மதியம் சுமார் 2.30 மணியளவில், சாலாக் திங்கி மாரியம்மன் கோயிலை அடைந்த இவர்களுக்கு, ஆலயத் தலைவர் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்து, பொன்னாடை பூமாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இன்றோடு 340 கிமீ கடந்து, சிலாங்கூர் மாநிலத்தை தியாகு குழுவினர் அடைந்துள்ளனர். இன்னும் எஞ்சியிருப்பது, புத்ரா ஜெயாவை அடைய 25 கிலோ மீட்டர்கள்தான். நாளை டெங்கில் நோக்கி அவர்களின் பயணம் தொடரும், நாளை மறுநாள் புத்ரா ஜெயாவில் காலை மணி சுமார் 9-க்கு இப்பெருநடைப் பயணம் முடிவுறும்.

நாளை, டெங்கில் பட்டணத்தில், பொது மக்கள் அவர்களைச் சென்று காணலாம்.

மேல் விவரங்களுக்கு : – https://www.facebook.com/MotherTongueEducation/ முகநூல் பக்கம் செல்லவும்.

அவர்களைச் சந்திக்க விரும்பும் அன்பர்கள்,  012 4341474 –  தமிழ் இனியன் / 016 948 9218 – கௌதமன்  என்ற எண்களில் அழைக்கலாம்.

  • ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்