பி.எஸ்.எம். : அரச பரம்பரையை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிரான பிரச்சாரத்தை சுவாராம் தொடங்க வேண்டும்

ஜொகூர் அரசக் குடும்பத்திற்கு எதிரான விமர்சனங்களுக்காக கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), இந்த விஷயத்தை விளம்பரப்படுத்த, உரிமைகளுக்காக வாதிடும் சுவாராம் குழுவினரை ஒரு பிரச்சாரத்தைத் தொடங்க கேட்டுக் கொண்டுள்ளது.

‘ஆன்லைனில் வேடிக்கை’யாக தகவல் பரிமாறுபவர்களைக் கைதுசெய்து, குற்றஞ்சாட்டி, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தைக் காட்டி  பயமுறுத்தும் அதிகாரிகளை, பி.எஸ்.எம். மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் சாடினார்.

“மக்கள் வேடிக்கையாக தகவல் பரிமாறுகின்றனர், அடுத்து என்ன நடக்கும் தெரியுமா, அவர்கள் கைதுசெய்யப்பட்டு, ஜொகூருக்கு இழுத்துச் செல்லப்படுவர். நான் நினைக்கிறேன், ஜொகூரை என்ன செய்வது என்று, கருத்தொருமித்த பிரச்சாரம் ஒன்றை சுவாராம் மேற்கொள்ள வேண்டும். ஜொகூர் மக்கள், இரவில் ஒரு மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவிக்கக்கூட தயங்குகிறார்கள்,” என்றார் அவர்.

“சில (ஜொகூர்) வழக்குரைஞர்கள், வழக்கை (அரச பரம்பரை தொடர்புடைய) எடுக்கக்கூட தயங்குகின்றனர், நாங்கள் கோலாலம்பூரிலிருந்து வழக்குரைஞர்களை அழைத்துச் செல்லவேண்டியுள்ளது,” என்று சுவாராம் அமைப்பின் ‘2017 மலேசிய மனித உரிமை அறிக்கை கண்ணோட்ட’த்தை அறிமுகம் செய்யும் நிகழ்வில் அருட்செல்வன் பேசினார்.

இவ்வாண்டு மட்டும், முகநூல், இன்ஸ்தாகெராம் போன்ற சமூக ஊடகங்களில் ஜொகூர் அரச பரம்பரையை விமர்சித்ததற்காக 6 பேர் கைதானதோடு, நால்வர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மலாய் மேய்ல் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் கருத்துரைகளைக் கண்காணிப்பதில் அதிகாரிகள் அதிக ஈடுபாடு கொள்ளக்கூடாது, காரணம் அவை உண்மையில் பயமுறுத்தல்களோ அச்சுறுத்தல்களோ அல்ல என்று அருட்செல்வன் மேலும் கூறினார்.

சுவாராம் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி, அருட்செல்வனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார், ஆனால் பிரச்சாரத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை தனது குழுவினருடன் “உட்கார்ந்து, உத்தேசம் செய்ய” நேரம் தேவைபடும் என்றார்.

அவரது சக இயக்குநர், குவா கியா சோங், பிரச்சாரம் அரசக் குடும்பத்தைப் பற்றி இருக்காது, மாறாக மலேசிய சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டிருக்கும் என்று வலியுறுத்தினார்.