காலிட் இப்ராஹிம் ‘மிகவும் விசுவாசமான’ மந்திரி பெசார், சிலாங்கூர் சுல்தான் புகழாரம்

கடந்த 2014-ல், காலிட் இப்ராஹிம், மாநில மந்திரி பெசார் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது, சிலாங்கூர் சுல்தான் அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.

தி ஸ்டார் நாளிதழுக்கான ஒரு பேட்டியில், அரசியல் சூழ்ச்சிகளால் தான் களைப்படைந்து விட்டதாக கூறிய சுல்தான் ஷராஃபுட்டின் இட்ரிஸ் ஷா, எனினும், சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் காலிட்டின் விசுவாசத்தைப் பாராட்டினார்.

“நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை, குறிப்பாக காலிட்டிற்கு எதிராக. அவர் மிகவும் விசுவாசமானவர், திடீரென்று நீக்கப்பட்டார்.

“ஒருவேளை மறைமுகமாக ஏதாவது நடந்திருக்கலாம், ஒருவேளை நான் அரசியல்வாதி இல்லை என்பதால், அது எனக்கு புரியாமல் போயிருக்கலாம்,” என்று, தனது 72-வது பிறந்தநாளை நாளை கொண்டாடவிருக்கும் அவர் தெரிவித்தார்.

1990-களில் அம்னோவில் இணைந்த காலிட், 2000 ஆண்டு வாக்கில் பிகேஆரில் சேர்ந்தார். 2008 பொதுத் தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தைப் பக்காத்தான் வென்ற பிறகு, காலிட் அம்மாநிலத்தின் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.

கட்சியில் ஏற்பட்ட உட்பூசலின் காரணமாக, பிகேஆர் கட்சி உறுப்பியத்திலிருந்து நீக்கப்பட்டதால், 2014 ஆகஸ்ட் 26-ல், காலிட் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகினார்.

காலிட் நீக்கப்பட்டது, சிலாங்கூர் அரசியலில் மிகவும் சவாலான அத்தியாயம் என்று சுல்தான் ஷராஃபுட்டின் விவரித்தார்.

காலிட்டிற்குப் பதிலாக, அம்மாநிலத்தை வழிநடத்த, வான் அஷிஷாவைத் தான் நிராகரித்ததற்கு, ‘பாலினம்’ காரணமல்ல என்றார் அவர்.

“அவர் ஒரு பெண் என்பதற்காகவோ, அல்லது அவருக்குத் தகுதி இல்லை என்பதற்காகவோ நான் வான் அஷிஷாவை நிராகரிக்கவில்லை.

“நான் முன்னதாகவே சொல்லிவிட்டேன் – ஒரு மந்திரி பெசார் தொலைவிலிருந்து இயக்கக்கூடியவராக இருக்கக்கூடாது (ரிமோட் கொன்ட்ரோல்), அவர் பிறரின் கைப்பாவையாக இருக்கக் கூடாது. மக்களுக்கு ஏதாவது செய்ய, நீங்கள் ஒரு வலுவான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.

“பெயர்களைத் தரும்படி நான் அவர்களிடம் கேட்டால், அவர்கள் ஒரே ஒரு பெயரைக் கொடுக்கிறார்கள். அதாவது, அவர்கள் என்னை நிர்பந்திக்கிறார்கள் என்று இதற்கு அர்த்தம்.

“நான் எப்போதும் அரசாங்கத்திடம் இருந்து, தேர்வு செய்வதற்குச் சில பெயர்களைக் கேட்பேன், சிலநேரங்களில் அவர்கள் 3 பெயர்களைக் கூட அனுப்புவார்கள், ஆனால் அவர்களின் முன்னுரிமைகளை எனக்குப் பட்டியலிட்டு கூறிவிடுவார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களை அனுப்புவதில், அவர்களுக்கு என்ன பிரச்சனை? ”

“நான் எதனையும் அறிவுறுத்தவில்லை. ஆனால், திடீர் பொதுத் தேர்தல்கள் எனக்கு பிடிக்கவில்லை, அது குழப்பத்தை விளைவிக்கும், அதிக செலவுகளை ஏற்படுத்தும், உண்மையில், நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், மக்களையும் மாநிலத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும்.

“எனவே, அவர்கள் அடுத்த தேர்தல் வரை அரசாங்கத்தை வைத்திருக்க விரும்பினால், அது நல்லது. ஆனால், பொதுத் தேர்தலுக்குப் பிறகு, என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.”