டிசம்பர் 10, 2017 – சிலாங்கூர், டெங்கில் – நடைப்பயணத்தின் 16-ம் நாள், இன்று காலை 9 மணியளவில், சாலாக் திங்கியில் இருந்து, டெங்கிலை நோக்கி நடக்கத் தொடங்கியதாக தியாகு தெரிவித்தார்.
இன்று டெங்கில் வட்டாரத் தமிழ் ஆர்வளர்களும் இளைஞர்களும் தியாகுவுடன் சேர்ந்து நடந்து வந்துள்ளனர். வழிநெடுகிலும், அதிகமானோர் அவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர், பெரும்பாலானோர் இருமொழி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாலை 3.30 மணியளவில், டெங்கில் அம்பார் தெனாங் ஶ்ரீ மயூர நாதர் ஆலயம் வந்தடைந்த தியாகு மற்றும் அஞ்சா தமிழன் இருவரையும், கோயில் தலைவர் வரவேற்று உபசரித்துள்ளார். இன்று இரவு அவர்கள் அக்கோயிலில் தங்கி ஓய்வெடுக்க உள்ளனர்.
நாளை புத்ரா ஜெயாவை அடைய, இன்னும் 16 கிலோ மீட்டர்கள் எஞ்சியுள்ளன. இந்த 16 நாள்கள் நடைப்பயணத்தின் போது, தங்களுக்கு நேரடியாகவும் மற்றவர்கள் மூகமாகவும் உதவி நல்கிய தனிநபர்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர் தியாகு குழுவினர்.
அதோடுமட்டுமின்றி, “தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் நமது உரிமை மட்டுமல்ல, நமது சொத்து. இந்நாட்டில் நமது அடையாளம் நிலைத்து இருக்க வேண்டுமென்றால், தமிழ்க்கல்வியையும் தமிழ்ப்பள்ளியையும் நாம் பேணிக் காக்க வேண்டும், வளர்க்க வேண்டும். அப்போதுதான், நமது வாழ்வாதாரம் இந்நாட்டில் மேன்மையடையும் என்பது என் கருத்து.
“ஆக, இதனை ஒரு கோரிக்கையாக மலேசியர்களிடமே வைக்கிறேன், தமிழ்ப்பள்ளியை மீட்க, தமிழ்க்கல்வியைக் காக்க, நாம் ஒன்றுபட்டு செயலாற்றுவோம், வாருங்கள்,” என்றார் தியாகு.
தற்போது, நாளை புத்ரா ஜெயாவில், பிரதமரிடம் மனு வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தியாகு தெரிவித்தார். நாளை காலை, புத்ரா ஜெயாவை நோக்கி, அவர்களின் பயணம் தொடரும், வாய்ப்பும் வசதியும் இருக்கும் தமிழ் உணர்வாளர்கள் நாளை புத்ரா ஜெயா வந்து, இந்த வரலாற்றுப்பூர்வமான நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்று தியாகு கேட்டுக்கொண்டார்.
“இது கட்டாயம் அல்ல, நேரமும் வசதியும் இருந்தால், நாளை புத்ரா ஜெயாவில் சந்திப்போம்,” எனக் கூறி விடைபெற்றார் தியாகு.
மேல் விவரங்களுக்கு : –
https://www.facebook.com/MotherTongueEducation/ முகநூல் பக்கம் & 012 4341474 – தமிழ் இனியன் / 016 948 9218 – கௌதமன்
- ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்