தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஆங்கிலப் புலமையை அதிகரிக்க அரசாங்கம் விவேகமாக செயல்படவேண்டும். அதற்கு இந்த இருமொழிப் பாடத்திட்டம் ஒரு முறையல்ல என்று சிலாங்கூர் மாநில மக்கள் நீதி கட்சி, இளைஞர் அணி உதவி தலைவர் தீபன் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்க்கல்விக்கும் இது மிரட்டலாக அமையும் என்பதால், இத்திட்டத்தைத் தான் கண்டிப்பதாக தீபன் கூறினார்.
“அறிவியல் – கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் பயில்வதால் மட்டும், தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஆங்கிலப் புலமை வளர்ந்துவிடாது. இவை இரண்டும் மொழி தொடர்பான பாடங்கள் இல்லை, ஆனால், தாய்மொழியோடு ஒன்றிணைந்த பாடங்கள். அப்பாடங்களின் நுணுக்கங்களையும் அடிப்படைகளையும் புரிந்துகொள்ள, தாய்மொழிக் கல்வி வாயிலாக பயில்வதே சிறந்தது, அவ்வாறு பயிலும் மாணவர்களாலேயே, அப்பாடங்களை நன்கு உள்வாங்கி தேர்ச்சி பெற இயலும்,” என்று, தீபன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த இருமொழி பாடத்திட்டத்தைச் சீனப் பள்ளிகள் யாவும் நிராகரித்திருப்பது அவர்களது மொழி பற்றையும் சீனப் பள்ளிகளின் வளர்ச்சியில் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையையும் உணர்த்துகிறது. ஆனால், தமிழ்ப்பள்ளிகள் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவது ஏன் என்று தீபன் கேள்வி எழுப்பினார்.
தமிழ்ப்பள்ளி பெற்றோர்களுக்கு இத்திட்டம் பற்றிய முழுமையான விளக்கம் வழங்கப்படாமல், இதனை அமலுக்குக் கொண்டுவருவது ஏன் என்றும், அவர் மேலும் கேட்டார்.
மொழி ஓர் இனத்தின் உயிர், நமது அடையாளம் என்பதை நாம் உணர வேண்டும். நமது மொழி காக்க, இந்த இருமொழி பாடத்திட்டம் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
இதனை உறுதி செய்யும் வகையில், தோழர் தியாகு மற்றும் அஞ்சா தமிழனின் உன்னத முயற்சிக்கு நாம் தமிழ் உணர்வோடு தோள் கொடுப்போம் என்று சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினருமான தீபன், தனது அறிக்கை வாயிலாக அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
டி.எல்.பி. திட்டத்தை வேண்டும் தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பிள்ளைகள் எந்த பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர் என்று கண்டறியுங்கள்.