ஸைட்டைப் போலிஸ் புக்கிட் அமானுக்கு அழைத்தது

நாளை காலை, கோலாலம்பூர் புக்கிட் அமானில், தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு, பிரதமர் துறை இலாகாவின் முன்னாள் அமைச்சர் ஸைட் இப்ராஹிம்மை காவல்துறை பணித்துள்ளது.

இந்த விசாரணை, டிசம்பர் 5-ம் தேதி, சிலாங்கூர் சுல்தான் பற்றி, தான் டுவிட்டரில் பதிவிட்ட செய்தி தொடர்பாக இருக்கலாம் என்று தான் நம்புவதாக ஸைட் தெரிவித்தார்.

இருப்பினும், எந்த சட்டப்பிரிவின் கீழ், தான் விசாரிக்கப்படவுள்ளேன் என்று போலிஸ் தரப்பினர் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“இல்லை, எனக்குத் தெரியவில்லை (சட்டப்பிரிவு), எனக்கு அங்கு வருமாறு செய்தி மட்டுமே வந்தது, பிரச்சனை இல்லை, நான் அங்கு சென்று, கேள்விகளுக்குப் பதிலளிப்பேன்,” என்று அந்த டிஏபி உறுப்பினர் தெரிவித்தார்.

“போலிசார் பலரை விசாரிக்க வேண்டிவரும் என நான் நினைக்கிறேன், காரணம் பலர் புகார் செய்துள்ளனர், இது ஒரு பொது பிரச்சனையாகிவிட்டது,” என்றார் அவர்.

“எந்தவொரு சட்டத்தையும் நான் மீறியுள்ளேனா என்று போலீஸ் விசாரணை செய்ய வேண்டும், எனவே எனது விளக்கத்தை அவர்கள் கேட்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஸைட் தான் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்று தன்னைத் தற்காத்து வருகிறார், தனது டுவிட்டர் செய்தியில் யாரையும் தூண்டிவிடும் அம்சம் இல்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த டிசம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்ட ‘தி ஸ்டார்’ பத்திரிகையின் ஒரு பேட்டியில், சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபூடின் இட்ரிஸ் ஷா முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் “கோபம்” இந்த நாட்டை “எரித்துவிடும்” என்று கூறியிருந்தார்.

மகாதிர், தனது வாரிசுகள் (பிரதமர்கள்) தனது மரபியத்தை முறியடிப்பதை அவர் விரும்பவில்லை என்றும், அவரிடம் “ஆழமான வெறுப்பு” இருப்பதாக தாம் கருதுவதாகவும் சுல்தான் மேலும் தெரிவித்திருந்தார்.

அதே நாளில், ஸைட் சமூகச் செய்தி ஊடகத்தில் சிலாங்கூர் சுல்தான் தனது அறிக்கையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நாடு பற்றி எரியும்போது, அதை எதிர்த்து நிற்கும் நிலையில் யாரும் இங்கு இல்லை என்றும் எழுதினார்.

அதனைத் தொடர்ந்து, சில அம்னோ தலைவர்கள் ஸைட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர், ஆனால் அந்த முன்னாள் அமைச்சர் தான் தவறு எதையும் செய்யவில்லை என்று வலியுறுத்தினார்.

எனினும், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் சட்டம் 1998 சட்டத்தின் கீழ், ஸைட் விசாரிக்கப்படுவார் என்று காவல்துறைத் தலைவர் முகமட் ஃபூஷி ஹரூண் உறுதிப்படுத்தினார்.