டுரியான் பழங்கள் சீனாவுக்கு அதிகம் ஏற்றுமதியாவதற்குத் தாமே காரணம் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொன்னாலும் சொன்னார் இப்போது அதுவும் ஒரு அரசியல் விவகாரமாகி முள்ளாகக் குத்தத் தொடங்கியுள்ளது.
மலேசியாவில் டுரியான் கிடுகிடுவென விலை உயர்ந்திருப்பதற்கு நஜிப்பே காரணம் என்றும் பலரும் அவரைக் குற்றம் சொல்கிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க நேற்றிரவு கோலாலும்பூரில் ஒரு விருந்தில் உரையாற்றிய மலேசியாவுக்கான சீனாவின் புதிய தூதர் பாய் தியான், டுரியான் விலை உயர்வு குறித்து மலேசியர்கள் குறை சொல்லக்கூடாது என்றார்.
இவ்விவகாரத்தில் நேர்முறை கண்ணோட்டம் தேவை என்று குறிப்பிட்ட அவர், விலை உயர்வால் ஊக்கம் பெற்று டுரியான் விளைச்சலை அதிகரித்து பொருளாதாரத்தை வளப்படுத்தும் முயற்சியில் மலேசியர்கள் ஈடுபட வேண்டும் என்றார்.
சீனா மலேசிய பொருள்கான செம்பனை எண்ணெய், பறவைக் கூடுகள், உறைய வைக்கப்பட்ட டுரியான் ஆகியவற்றின் இறக்குமதியை அதிகரிக்கப் போவதாகவும் பியான் கூறினார்.
நஜிப் டுரியானைப் பற்றி என்ன சொன்னார் என்ற விசயத்துக்கு வருவோம்.
கடந்த மாதம் வியட்நாமில் ஆசிய-பசிபிக் பொருளாதார (ஏப்பெக்) தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் பேசியபோதுதான் நஜிப் டுரியான் கதையைக் கூறினார்.
“டுரியான் ஓர் உயர்தர உணவு. அதன் நாற்றம் நரகம், ஆனால், சுவையோ சொர்க்கம்”, என்றார்.
வழக்கமாக ஒரு கிலோ ரிம4-ரிம5 ஆக விற்கும் டுரியான் இப்போது சீனாவில் நல்ல ஆதரவைப் பெற்றிருக்கிறது என்றும் அதன் விளைவாக சீனர்கள் ஒரு கிலோவுக்கு ரிம130வரை கொடுக்கத் தயாராக உள்ளனர் என்றும் நஜிப் கூறினார்.
“மற்ற எந்த நாட்டையும்விட டுரியானை அதிகம் விரும்பும் நாடு சீனாதான்”, என்றாரவர்.