இஸ்ரேலின் தலைநகரமாக பைடூல்மாக்டிஸை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையைக் குற்றம் கூற பிரதமர் நஜிப்புக்குத் தைரியம் இல்லை என்று ஓர் அரசியல் ஆய்வாளர் கூறியுள்ளார்.
பினாங்கு இன்ஸ்டிடியூட்சைச் சேர்ந்த வோங் சின் ஹூவாட், தன்னை ஓர் இஸ்லாமிய போர்வீரனாக விவரிக்கும் பிரதமர், டிரம்ப்பின் கோபத்தை உயர்த்தி, அதனால் அவர் மீதான அமெரிக்க நீதித்துறையின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையிலான வார்த்தைகளைத் தவிர்க்க முயற்சிக்கிறார் என்றார்.
இதன் விளைவாக, கடந்த வாரம் 71-வது அம்னோ மாநாட்டில் நஜிப்பின் அறிக்கை, அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்க்கும் உலக நாடுகளின் எதிர்வினையோடு ஒப்பிடுகையில் வீரியமற்று இருந்தது.
“அவர் பாலஸ்தீனியர்களுடன் இருப்பதாக முஸ்லீம் மக்களிடம் காட்ட நினைக்கிறார், ஆனால், அவர் கவலைப்படுவதுபோல் பாசாங்கு செய்வதை மக்களால் பார்க்க முடிகிறது.
“டிரம்ப்பைத் திட்டுவதற்கு அவரின் மூலதனம் என்ன? டிரம்ப்பின் நண்பராக இருப்பதற்கு அவர் மிகவும் ஆவலாக இருக்கிறார், அதற்காக மலேசிய மக்களின் பணத்தைச் செலவழித்து, அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பாற்றவும் அவர் தயாராக இருக்கிறார்.
டிசம்பர் 5 அன்று, அரபு தலைவர்களிடம் இஸ்ரேல் தூதரகத்தை ஜெருசலமுக்கு நகர்த்துவதற்கான தனது எண்ணத்தை டிரம்ப் தெரிவித்தார், இது வாஷிங்டனின் நீண்ட கால கொள்கைகளை மறுபரிசீலனைச் செய்வதோடு, மத்தியக் கிழக்கில் ஒரு பெரும் வன்முறைக்கும் இடமளிக்கும்.
டெல் அவிவ்-இல் இருந்து தூதரகத்தை மாற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை டிரம்ப் பணித்தாலும், 6 மாதங்களுக்கு அதனைத் தள்ளிவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமெரிக்க மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் , அம்னோ மாநாட்டில், இஸ்லாமிய உலகம் இஸ்ரேலின் தலைநகரமாக பைடூல்மாக்டிஸ்- ஐ அங்கீகரிக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்த்து நிற்க வேண்டும் என்று நஜிப் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியலாளர், பேராசிரியர் சையட் ஃபரிட் அலாட்டஸ், பிரதமர்கள் அல்லது பிற நாட்டுத் தலைவர்கள் விடும் அறிக்கையைவிட, அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் முக்கியமானது என்று கூறியுள்ளார்.
உலக ஆதரவைத் திரட்டி, டிரம்ப்பின் முடிவை எதிர்க்க, மலேசியா ஒரு முக்கியப் பாத்திரத்தை வகிக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார்.
“மலேசியா சர்வதேசச் செல்வாக்கையும் நாடுகளுக்கிடையேயான நல்லுறவையும் கொண்டுள்ளதா? நாம் காத்திருப்போம்.”