கேமரன் மலை குடியிருப்பாளர்கள் சிலர் தங்கள் நில உரிமை பிரச்சனைக்காக, பஹாங் மந்திரி பெசார், அட்னான் யாக்கோப்பைச் சந்திக்கும் வரை அங்கிருந்து நகரமாட்டோம் என நேற்று முதல், மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் அமர்ந்து, காத்துக்கிடக்கின்றனர்.
மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.), கேமரன் மலை கிளைச் செயலாளர் சுரேஸ் குமார் தலைமையில் 2 குழந்தைகள் உட்பட 19 பேர் நேற்று மந்திரி பெசாரை சந்திக்கவந்து, இன்றுவரை அங்கேயே உள்ளனர்.
நேற்று சுமார் 2 மணியளவில், அவர்கள் குவாந்தானில் உள்ள யாயாசான் பஹாங் அலுவலகத்திற்கு மந்திரி பெசாரைக் (எம்பி) காணச் சென்றுள்ளனர். முன்னதாகவே, எம்பியைச் சந்திக்க, அவரின் அலுவகத்திற்கு வர அனுமதி பெற்றுவிட்டதாக சுரேஸ்குமார் நம்மிடம் சொன்னார்.
ஆனால், நேற்று காலை திடீரென அச்சந்திப்பை யாயாசான் பஹாங் அலுவலகத்திற்கு மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அங்குச் சென்றதாக சுரேஸ் தெரிவித்தார்.
கனத்த மழையில் அங்குச் சென்ற அவர்களை, சுமார் 400 மீட்டர் தொலைவில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே நுழையுமாறு போலிசார் கேட்டுக்கொண்டதாக சுரேஸ் தெரிவித்தார்.
“நாங்கள் யாயாசான் பஹாங்கை அடைந்தபோது கனத்த மழை, ஆனால் எங்களை உள்ளே நுழையவிடாமல், காரை வெளியே போட்டுவிட்டு, நடந்துவருமாறு போலிசார் கேட்டுக்கொண்டனர். நாங்கள் அதனை மறுத்ததோடு, உள்ளே நுழைந்து மற்றவர்களை இறக்கிவிட்டு, மூன்று கார்களையும் வெளியே போட்டுவிட்டு, மழையில் நனைந்துகொண்டே உள்ளே நடந்து வந்தோம்.
“உள்ளே காரை நிறுத்த அதிகமான இடங்கள் இருக்கும் போது, ஏன் எங்களை வெளியே நிறுத்தச் சொன்னீர்கள்? இது யாருடையக் கட்டளை, எனக் கேட்டபோது, ‘மேலிடத்து உத்தரவு’ என்று மட்டும் பணியில் இருந்த போலிசார் தெரிவித்தனர்,” என்று சுரேஸ் கூறினார்.
வாசலை அடைந்த அவர்களை உள்ளே நுழையவிடாமல், அங்கேயே நிறுத்தி பேசிகொண்டிருந்ததாகவும் சுரேஸ் தெரிவித்தார்.
“உள்ளே அமர்ந்துபேச இடங்கள் இருந்தபோதும், எங்களை உள்ளே அழைத்து உட்காரவிடாமல், வாசலிலேயே வைத்து பேசிக்கொண்டு இருந்தனர். எங்களின் அடையாள அட்டையைக் கேட்டனர், நாங்கள் கொடுக்க மறுத்தோம்.
“முதலில் எங்களை மனிதர்களைப் போல் நடத்துங்கள், பிறகு நாங்கள் கொடுக்கிறோம் என்று சொன்னேன். உள்ளே செல்ல அனுமதியுங்கள், அடையாள அட்டையைக் கொடுக்கிறோம்,” என்று அவர்களிடம் கூறியதாக சுரேஸ் தெரிவித்தார்.
மீண்டும் அவர்கள் அடையாள அட்டையைக் கேட்டபோது, கொடுத்ததாக சுரேஸ் தெரிவித்தார்.
அந்நேரத்தில் அங்கு வந்த எம்பி, அவர்களின் அடையாள அட்டையைப் பார்த்து, பெயரை வாசித்து, ஒவ்வொருவராக உள்ளே செல்ல அனுமதித்துள்ளார். ஆனால், சுரேஸின் அட்டையைப் பார்த்ததும், உள்ளே செல்ல அனுமதி கொடுக்கவில்லை என்று சுரேஸ் கூறினார்.
“எனக்கு ஏன் அனுமதி இல்லை என்று கேட்டபோது, நான் அவரை முகநூலில் கேலிசெய்துள்ளதால், எனக்கு அனுமதி இல்லை என்று எம்பி தெரிவித்தார்.
“எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மற்றவர்களும் உள்ளே செல்லாமல், வெளியேறினர். இதனைப் பார்த்து, ‘ஓ! நீங்களும் உள்ளே வரவில்லையா? நல்லது, நன்றி…. வணக்கம்….’ என்று கூறிவிட்டு, எம்பி உள்ளே சென்றுவிட்டார்.
“நாங்கள் அங்கேயே, வெளியில் , எம்பியைச் சந்திக்க உட்கார்ந்துவிட்டோம். ‘எம்பி துருன், துருன்’ (எம்பி இறங்குங்கள்) என கோசமிட்டுக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில், எம்பி பின் கதவு வழியாக வெளியே வந்து, தனது காரில் எங்களைக் கடந்து சென்றதைப் பார்த்தோம். ஆக, இனி அங்குக் காத்திருந்தால், பயனில்லை என்று அங்கிருந்து கிளம்பி, எம்பியின் அலுவலகமான, விஸ்மா ஶ்ரீ பஹாங் சென்றோம்,” என சுரேஸ் நேற்றைய நிகழ்வுகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
விஸ்மா ஶ்ரீ பஹாங்கிற்கு அவர்கள் சென்றதும், இரண்டு முன் வாசல்களும் மூடப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால், அவர்கள் அங்கேயேத் தரையில் அமர்ந்துள்ளனர். இதனைப் பார்த்து ஓசிபிடி, ஏஎஸ்பி அஷிஸ் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பணித்துள்ளார்.
“ஏஎஸ்பி அஷிஸ் எங்களை 10 நிமிடத்திற்குள் கலைந்து போகச் சொன்னார், இல்லையேல் கைது செய்வேன் என்றும் கூறினார். ஆனால், மக்கள் எம்பியைப் பார்க்கும் வரை, அங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம், வேண்டுமானால் கைது செய்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். அதனால், போலிசாரும் செய்வதறியாது அங்கிருந்து நகர்ந்துவிட்டனர்,” என்றார் சுரேஸ்.
“சற்றுநேரத்தில், எங்களைக் கைதுசெய்யப் போவதாககூறிய போலிஸ்காரர்கள் ஒவ்வொருவராக, காரில் ஏறி அங்கிருந்து வெளியாகினர். ஆக, எங்களை அவர்கள் கைது செய்யமாட்டார்கள் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம்,” என்றார் சுரேஸ்.
நேற்றிரவு அங்கேயே தங்கிய அவர்களுக்கு, நண்பர்கள் சிலர் உணவும் நீரும் வாங்கிக் கொடுத்துள்ளனர். சிலர் முகநூல் வழியாக செய்தி அறிந்து, அவர்களுக்கு ஆதரவு வழங்க வந்துள்ளனர்.
அவர்களில், மஇகாவினரும் அடங்குவர் என்று சுரேஸ் தெரிவித்தார்.
“எங்கள் பிரச்சனையைச் சுமூகமாக பேசி, தீர்த்து தருவதாக அவர்கள் கூறினர். ஆனால், நாங்கள் சில உண்மைகளை அவர்களிடம் சொன்னதும், அவர்கள் சென்றுவிட்டனர்,” என்றார் சுரேஸ்.
இன்று காலை எப்படியாவது எம்பியைச் சந்தித்து பேச முடிவெடுத்து, இன்னும், (மதியம் 12.30) அவர்கள் அங்கேயே உள்ளனர். குழந்தைகள், பெண்கள் என இருபதுக்கும் அதிகமானோர் தற்போது, பஹாங் மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் வாசலில் காத்திருக்கின்றனர், எம்பியின் வருகைக்காக.
நல்ல அரசாங்கம்! 30 -40 ஆண்டுகளானாலும் நிலப்பட்டா கொடுக்காமல் இழுத்தடிக்கும் அரசாங்கம். இதுவும் ம.இ.க. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற இடத்தைக் கொண்டிருந்த இடம்! இந்த முறை உயர்ந்த சாதியினருகே இந்த இடத்தைக் கொடுக்க வேண்டுமென்று உயர் மட்டத்திர்க்கு தகவல் போயுள்ளதாம். அடுத்த இனத்துக்காரன்கூட நம்மை சாதி பார்த்துதான் பேசுகின்றான், நாடாளுமன்ற சீட்டுக்கு ‘ரெக்கமெண்டேசன்’ செய்கிறான். இதற்கு சாதியத்தைக் கட்டிக் கொண்டு வாழும் அங்குள்ள தமிழரே காரணம்.