அன்வார் இப்ராஹிமின் அமெரிக்க வழக்கறிஞர், கிம்பர்லி மோட்லேவுக்கு, மலேசிய சிறைச்சாலைகளை விமர்சிக்கும் உரிமை இல்லை என்று உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
உள்துறை அமைச்சின் துணையமைச்சர் நூர் ஜஸ்லான் மொஹமட், மோட்லிக்கு எதிராக தடைவிதித்தபோது, அவர் ஆணவத்துடன் திமிராக, அநாகரீகமாக நடந்துகொண்டார் எனக் கூறியுள்ளார்.
” ‘லொகஸ் ஸ்டாண்டி‘ என்றால் என்ன? அவர் மலேசிய சிறைச்சாலை சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி விவாதிக்க விரும்புகிறார். நாகரீகம் அற்றவர், என்ன ஆணவம், திமிர்,” என்று நூர் ஜஸ்லான் ஃப்.எம்.தி.-யிடம் இன்று கூறினார்.
நேற்று, மருத்துவமனையில் இருக்கும் தனது கட்சிக்காரரைச் சந்திக்க மோட்லிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இத்தடை நியாயமற்றது என்று மோட்லி கேள்வி எழுப்பினார்.
“சந்திப்புக்கு அனுமதி மறுத்த, உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் மலேசிய அரசாங்கத்தின் முடிவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
“அடிப்படையில், சிறையில் உள்ள எந்தவொரு நபருக்கும், அவருக்கு விருப்பமான சட்ட ஆலோசகரை அணுக உரிமை உண்டு.
“அன்வாரைச் சந்திப்பதற்கான எனது வேண்டுகோளை மறுத்து, நீதிக்கான அணுகுமுறை தொடர்பான சர்வதேசத் தரங்களை மீறுவதோடு; மலேசியாவின் தோற்றத்தையும் அவர்கள் சீர்குலைக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
மோட்லி, கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல், அன்வார் சார்பில் ஆஜராகி வருகிறார்.
கடந்த பிப்ரவரி 2015 முதல், 70 வயதான அன்வார், சுங்கை பூலோ சிறையில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.