அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள், கேமரன் மலை குடியிருப்பாளர்களின் நிலப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று பஹாங் மாநில மந்திரி பெசார் அட்னான் யாக்கோப் உறுதி அளித்துள்ளார்.
நேற்று, மதியத்திலிருந்து மந்திரி பெசாரின் வாக்குறுதிக்காக காத்திருந்த கேமரன் மலை மக்கள், இன்று மாலை 5 மணியளவில் நிம்மதியுடன் மலையை நோக்கி பயணித்தனர்.
மேலும் விவரம் அறிய, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.), கேமரன் மலை கிளைச் செயலாளர் சுரேஸ் குமாரைச் செம்பருத்தி.கோம் தொடர்புகொண்டது.
முன்னதாக இன்று காலை, தாங்கள் தங்கியிருந்த விஸ்மா ஶ்ரீ பஹாங் அலுவலகத்தில் போலிசார் குவிக்கப்பட்டதாக சுரேஸ் தெரிவித்தார்.
“காலை 9 மணியளவில், அதிகமான போலிசார் குவிக்கப்பட்டனர், போலிஸ் வேன்களும் வந்தன. எங்களைக் கைதுசெய்ய ஆயத்தமாகிவிட்டனர் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை,” என்று சுரேஸ் தெரிவித்தார்.
காலை 10.30 மணியளவில், விஸ்மா ஶ்ரீ பஹாங் அலுவலகத்தினுள் நுழைய முயற்சித்த அவர்களைப் போலிஸ் தடுத்து நிறுத்தியுள்ளது,
“நாங்கள் இந்நாட்டு மக்கள், எங்களுக்கு நாங்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த எம்பியைப் பார்க்க உரிமை உண்டு. எங்களை ஏன் தடுக்கின்றீர்கள் என்று, மக்கள் கேள்வி கேட்டனர்.
“எங்களைத் தடுப்பது யார் சொல்லுங்கள், நாங்கள் அவர்களுடன் பேசத் தயாராக இருக்கிறோம் என்றும் அவர்கள் போலிசிடம் கூறினர்.
“அதனைத் தொடர்ந்து, ஒரு போலிஸ் அதிகாரி எங்களைச் சந்திக்க அங்கு வந்தார். எங்களுக்கு உண்மையில் என்னதான் பிரச்சனை, எங்கள் கோரிக்கை என்ன என்று கேட்டார். எங்கள் பிரச்சனையைத் தீர்க்க உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்,” என்று சுரேஸ் கூறினார்.
அவரிடம், தங்களின் நோக்கத்தை மக்கள் தெரிவித்துள்ளனர். எம்பியைச் சந்தித்து, நிலப்பிரச்சனைத் தொடர்பாக பேச வேண்டும், எம்பி இல்லையேல், அவரின் பிரதிநிதியிடமாவது பேச வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதற்கு ஒப்புக்கொண்ட அந்தப் போலிஸ் அதிகாரி, சற்று காத்திருக்கச் சொன்னதாக சுரேஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே, குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபுஷியா சாலே (பிகேஆர்) அவர்களை அங்கு வந்து சந்தித்ததாகவும், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தந்ததாகவும் சுரேஸ் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, தெருந்தும் சட்டமன்ற உறுப்பினர் சிம் சோங் சியாங் (பிகேஆர்) அவர்களைச் சந்தித்து, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும் சுரேஸ் தெரிவித்தார்.
ம.இ.கா. குவாந்தான் தொகுதி தலைவர் தேவேந்திரனும் சுரேஸைச் சந்திக்க வந்துள்ளார். நிலப்பிரச்சனை குறித்த விவரங்களையும் ஆவணங்களையும் தனக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதாகவும், தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாகவும் அவர் கூறியதாக சுரேஸ் தெரிவித்தார்.
மதியம், பஹாங் மாநில ம.இ.கா. தலைவர்,முன்னாள் செனட்டர் குணசேகரன் இராமன் ஒரு பெரிய குழுவினருடன் அவர்களைச் சந்திக்க வந்துள்ளார்.
“மந்திரி பெசாரின் பிரதிநிதியாக, குணா எங்களைச் சந்திக்க வந்தார். இந்தப் பிரச்சனையைச் சுமூகமாக தீர்த்து தருவதாகக் கூறினார், எம்பியைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார், ஆனால் நான் உள்ளே செல்லக்கூடாது என்ற நிபந்தனையோடு,” என்று சுரேஸ் நம்மிடம் தெரிவித்தார்.
“நாங்களும் ஒப்புக்கொண்டோம், காரணம் இந்தப் போராட்டத்திற்கு ஒரு முடிவு தெரிய வேண்டும், அடுத்தது, ஒப்புக்கொள்ளவில்லை என்றால், எங்களைத் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்லக்கூடும், அதனால் நாங்கள் ஒப்புக்கொண்டோம்,” என்று சுரேஸ் தெரிவித்தார்.
“அதுமட்டுமின்றி, இந்த ஒருநாள் போராட்டம் மக்களைப் பலப்படுத்தி இருந்தது, இந்தப் பிரச்சனையை, நான் இல்லாமலேயே இவர்களால் கையாள முடியும் என்றும் நான் நம்பினேன்,” என்று அம்மக்களுக்கு தலைமை தாங்கி அழைத்து வந்த சுரேஸ் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர்கள், குணாவின் அழைப்பின் பேரில், யாயாசான் பஹாங் சென்றுள்ளனர். அங்கு சுரேஸ் வெளியிலேயே நிற்க, மற்றவர்கள் உள்ளே சென்று, எம்பியுடன் கலந்துபேசி உள்ளனர்.
அந்தப் பேச்சு வார்த்தையின் போது, அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கேமரன் மலை மக்கள் நிலப்பிரச்சனைக்குச் சுமூகமான ஒரு தீர்வை வழங்குவதாக மந்திரி பெசார் உறுதியளித்துள்ளார்.
அதோடுமட்டுமின்றி, அந்த 12 குடும்பங்களின் நிலப் பிரச்சனையை நேரிடையாகக் கவனிக்க சிறப்பு அதிகாரியாக, குணாவை நியமிப்பதாகவும் எம்பி தெரிவித்துள்ளார்.
“ஆக, எங்களுக்கு ஒரு காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது, அடுத்தாண்டு மார்ச் மாதம், அதோடு, ஒரு சிறப்பு அதிகாரி வேறு நியமிக்கப்பட்டுள்ளார். இது எங்களின் போராட்டத்திற்குக் கிடைத்த சிறு வெற்றியாகவே நாங்கள் எண்ணுகிறோம். மேலும், இப்பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்க்க, தொடர்ந்து பஹாங் மந்திரி பெசாரின் பிரதிநிதி, பஹாங் மாநில ம.இ.கா. தலைவர் குணாவை நாங்கள் தொடர்புகொள்வோம்,” என்று சுரேஸ் குமார் செம்பருத்தி.கோம்-இடம் தெரிவித்தார்.
இதுவும் தேர்தல் வாக்குறுதியா? அடுத்த மார்ச் மாதத்திற்குள் தேர்தல் முடிந்து விடும். மாநில முதலமைச்சர் பதவி இழப்பார். சிறப்பு அதிகாரி இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார். இந்தியர் இப்படி எதிர் நோக்கிய எத்தனை பிரச்சனைகளைப் பார்த்து அரசாங்க அலுவலக படியேறி இறங்கி இறுதியில் விரக்தியடைந்திருப்போம். பழைய குருடி கதவைத் திரடி என்று அடுத்தத் தேர்தல் வரை இவர் காக்கப் போவது திண்ணம். எமது வாக்கு பொய்யானால் மகிழ்ச்சியடைவேன்.