இன்று காலை, அரசாங்க ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிணையத்தின் (ஜி.சி.டபிள்யுஎன்) கீழ் பணிபுரியும், சுமார் 30 பள்ளித் தொழிலாளர்கள், ஐந்து மாதங்களாகச் செலுத்தப்படாத தங்கள் ஊதியம் உட்பட, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தை வலியுறுத்தி, கல்வி அமைச்சின் முன் ஓர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10.30 மணியளவில் ஒன்றுகூடிய அவர்கள், கல்வி அமைச்சர் மஹ்ட்சீர் காலிட் மற்றும் அவரது துணை அமைச்சர்களுக்காகக் காத்திருந்தனர், ஆனால் மதியம் 12 மணிவரையில், அத்தொழிலாளர்களால் அவர்களைச் சந்திக்க முடியாமல் போனது.
கல்வி அமைச்சரும் துணை அமைச்சர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுவிட்டதாகப் பிறகு தெரிவிக்கப்பட்டது.
பள்ளிகளில் குத்தகை அடிப்படையில் பணியில் அமர்த்தப்படும் சுத்தம் செய்பவர்கள் மற்றும் பாதுகாவலர்களின் வேலை பாதுகாப்பு அற்றது என்று, கல்வி அமைச்சருக்குக் கொடுக்கவிருந்த ஒரு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பல குத்தகையாளர்கள், தொழில் சட்டங்களைக் கடைபிடிக்கவில்லை, ஆனால் அதைப்பற்றி கல்வி அமைச்சோ அல்லது மாநில, மாவட்டக் கல்வி இலாகாக்களோ கவலைப்படவில்லை.
மேலும், கீழ்நிலை 20 (பி20) குழுவின் ஒரு பகுதியான இத்தொழிலாளர்களுக்கு, ஒப்பந்த அமைப்பு முறை எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஜி.சி.டபிள்யு.என். சுட்டிக் காட்டியது.
உடனடி நடவடிக்கையாக, கல்வி அமைச்சு டைம் மெடி நிறுவனத்தின் பணியாளர்களுக்கு, ஆகஸ்ட் முதல் டிசம்பர் 2015 வரையிலான, ஐந்து மாதச் சம்பள பாக்கியைக் கொடுக்க வேண்டும் என்று அக்குழுவினர் வலியுறுத்தினர்.
மேலும், அரசு வருவாய் என நிதிகளை வகைப்படுத்துவதற்குப் பதிலாக, நீதிமன்றம் உத்தரவு கொடுத்தபடி, ரிம107,595 தொகையைக் பாதுகாவலர்களுக்குக் கல்வி அமைச்சு செலுத்த வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
கடந்த ஜனவரி 2013-ல் அறிமுகம் செய்யப்பட்ட குறைந்தபட்ச சம்பளத்தை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வழங்க அமைச்சைக் கேட்டுக்கொண்டபோதும், குத்தகையாளர்கள் குறைந்த பட்ச சம்பளத்தை வழங்கவில்லை, இதனை நேரடியாக அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள அரசு சட்டவிதிகள் தொழிலாளர்களை அனுமதிக்கவில்லை. .
பள்ளிகளில் சுத்தம் செய்பவர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் பாதுகாவலர்களைக் குத்தகை அடிப்படையில் இல்லாமல், நிரந்தர பணியாளர்களாக நியமிக்கச் சொல்லி, ஜி.சி.டபிள்யு.என். அமைச்சைக் கேட்டுக்கொண்டது.
இதுதொடர்பாக பேசிய, ஜி.சி.டபிள்யு.என். ஒருங்கிணைப்பாளர் ஆர்.மோஹனராணி, 70,000 ஒப்பந்த ஊழியர்களில் 50 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் பாதிப்புற்றுள்ளதாக தெரிவித்தார்.
“ஊழியர்களுக்கான நிதி கல்வி அமைச்சில் உள்ளது. அமைச்சு தொழிலாளர்களுக்கு நேரடியாக பணம் செலுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். அதைவிடுத்து, கோரப்படாத நிதிகளை அரசின் வருவாய் என உரிமை கொண்டாடக்கூடாது,” என்று அவர் மேலும் கூறினார்.
“அரசு பி40 குழுவினரைப் பற்றி பேசுகிறது, ஆனால் ஒப்பந்த அடிப்படையில் அவர்களைப் பணியில் அமர்த்தி, அவர்களை மேலும் ஏழ்மையில் தள்ளுகிறது. குத்தகையாளர்களிடம் இருந்து அமைச்சு ஒரு ‘போண்ட்’ –ஐ சேகரிக்கிறது, ஆனால் அது தொழிலாளர்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை,” என்று ராணி கூறினார்.
மோகனராணி தலைமையிலான ஜி.சி.டபிள்யு.என். பிரதிநிதிகள், மாஹ்ட்ஷீரின் செயலாளர் ரம்லியைச் சந்தித்தனர்.
“அமைச்சரின் செயலாளரிடம் நாங்கள் சந்திப்பிற்கான நாள் கேட்டோம். குறைந்தபட்ச சம்பளம், ஒரு நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய பணம் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை அன்று உறுதி செய்து, எங்களிடம் தெரிவிப்பர்,” என்றார் அவர்.
“அப்படி அவர்களால் முடியவில்லை என்றால், அமைச்சருடன் ஒரு சந்திப்பை அவர்கள் ஏற்பாடு செய்வார்கள்,” என்று ராணி மேலும் சொன்னார்.
முக்கால்வாசி இந்தியர் முகமாகத் தெரிகின்றது! அதான் அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. இதுவே முழுமையாக மண்ணின் மைந்தராக இருந்திருந்தால்……………….