அன்வார் இப்ராகிமை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டாக்டர் மகாதிர் கோரிக்கை விடுக்கிறாரே என்று வருத்தம் தெரிவிக்கிறார் முகம்மட் சைபுல் அஸ்லான்.
முன்னாள் பிரதமர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு கிறிமினல் வழக்கை “வேண்டுமென்றே அரசியலாக்கப் பார்க்கிறார்” என்றாரவர்.
“நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டுமாய் மகாதிரைக் கேட்டுக்கொள்கிறேன். முன்னாள் பிரதமரான அவருக்கு இது நல்லாவே தெரிந்திருக்க வேண்டும். அன்வாரின் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவன் நான்”, என சைபுல் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
அன்வார் தம் முன்னாள் உதவியாளரான சைபுலைக் குதப்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதற்காக ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
பதவி வெறியும் ஆசையும் மகாதிரின் கண்களை மறைத்து விட்டன என்று சைபுல் கூறினார்.
2014-இல் முன்னாள் பிரதமரைச் சந்தித்ததை அவர் விவரித்தார்.
“அரசியல் நோக்கத்துக்காக ஒருவரால் நீதி நெறிமுறைகளை எவ்வளவு எளிதாகக் கைவிட முடிகிறது.
“2014 அக்டோபரில் நான் என் மனைவியுடனும் அப்போதுதான் பிறந்த மகனுடனும் மகாதிரைப் பார்க்க யயாசான் பெர்டானா அலுவலகம் சென்றிருந்தேன். பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் அவர் என்னிடம் பரிவு காட்டினார்”, என்றவர் சொன்னார்.
ஆனால், அரசியல் நலன்கள் என்று வரும்போது நீதியும் உண்மையும் தடம் புரள்கின்றன.
“அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை என்பதுதான் எவ்வளவு உண்மை”, என்று சைபுல் மேலும் கூறினார்.
Maanang ketavan manthiri pathavikku Asaippadugiraan.