பெர்காசாவின் முன்னாள் இளைஞர் தலைவர் இர்வான் ஃபாஹ்மி இட்ரிஸ் பிகேஆரில் சேர்ந்திருக்கிறார். எதிரணியுடன் சேர்ந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி இறக்குவதே அவருடைய நோக்கம்.
இன்று காலை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் இர்வானுடன் பெர்காசா இளைஞர் செயலவை உறுப்பினர்களும் சாதாரண உறுப்பினர்களுமாக 35பேர் பிகேஆர் இளைஞர் துணைத் தலைவர் டாக்டர் அபிப் பஹார்டினிடம் தங்கள் விண்ணப்பப் பாரங்களைச் சமர்ப்பித்தனர்.
இர்வான் அம்னோவுடன் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டாலும் பெர்காசா உறுப்பியத்தை அவர் இன்னுமும் வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் முன்பு ஈப்போ பாராட் அம்னோ உறுப்பினராக இருந்தார்.
2010-இலிருந்து 2016வரை பெர்காசா இளைஞர் தலைவராக பதவி வகித்தார்.
2013இலிருந்தே நஜிப் பதவி விலகக் கோரிக்கை விடுத்து வருவதாக அவர் சொன்னார்.
மலேசியப் பொருளாதாரமும் மலாய் உரிமைகளும் நிலையற்றிருப்பதைக் கண்டு எதிரணியில் சேர முடிவு செய்ததாக இர்வான் கூறினார்.
“இப்போது சொல்லுங்கள், மலாய்க்காரர்களுக்குத் துரோகமிழைத்தவர்கள் யார்? மலாய்க்காரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள்கூட விற்கப்படுகின்றன. இது டிஏபி-இன் குற்றமா? யார் யாருக்குத் துரோகமிழைத்தது?”, என்றவர் வினவினார்.
ஓர் இனவாதி ஒர் இனவாத கட்சியில் இணைவது எல்லாம் ஒரு செய்தியா?