2013 புத்தாண்டை, ஒரே இரவில் இரண்டு நாடுகளில் கொண்டாடினார் ஜோ லோ

பினாங்கில் பிறந்த , ஜோ லோ என்று அனைவராலும் நன்கு அறியப்பட்ட, தொழிலதிபர் லோ தாக் ஜோ, 2013-ம் ஆண்டின் புத்தாண்டை, சிட்னி மற்றும் லாஸ் வேகாசில், தன் பரிவாரங்களுடன் மிகச் சிறப்பாக கொண்டாடியதாக, தி ஆஸ்திரேலியன் பத்திரிக்கை, இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இணையதளத்தில் வெளியிடப்பட்ட, சரவாக் ரிப்போர்டின் ஓர் அறிக்கையை மேற்கோளிட்டு, “அவர்களின் கொண்டாட்டம் மிகவும் ஆடம்பரமாக இருந்தது, 700,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள சூதாட்ட சில்லுகள் உட்பட – ஒரு விஐபி அறையில்,  சோவெரீன் அறையில் – தி ஸ்டார் கசினோ, சிட்னியில்” என்று தி ஆஸ்திரேலியன் கூறியுள்ளது.

“அவர்களை மகிழ்வித்த 15 கலைஞர்களில், கோசிப் கெர்ல் நடிகர்கள் சேஸ் க்ராஃபோர்ட், கிலீ மேத்யு மோரிஸ்சன், ஏரோவ், டிஜே சமந்தா ரோன்சன் ஆகியோரும் அடங்குவர்.

“ஆனால், அந்த ஆடம்பர விருந்துக்காக செலவு செய்தது லோ என்று, ஆஸ்திரேலிய ஊடகங்களுக்குத் தெரியாது,” என்றும் அந்த அறிக்கை கூறியது.

அதனைத் தொடர்ந்து, “2013-ம் ஆண்டு புத்தாண்டை, இரண்டு முறை கொண்டாட ஜோ லோவினால் மட்டுமே முடியும். ஒரு மில்லியன் டாலரை வீணடிக்க ஒரு நல்ல வழி,” என்று ஜோ லோ-வின் நண்பர் இன்ஸ்தாகிரேம்மில் பதிவிட்டதையும் அப்பத்திரிக்கை மேற்கோள் காட்டியது.

சிட்னியில், நள்ளிரவில் வான வேடிக்கையை வெடித்த மறுநிமிடம், லோ குழுவினர் கெண்பெரா விமான நிலையத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு அமெரிக்காவின் எட்லஸ் ஏர்-இடம் சிறப்பு வாடகையில் எடுக்கப்பட்ட, போயிங் 747 விமானத்தில் வேகஸ் சென்றுள்ளனர்.

புத்தாண்டு ஆடம்பர விழாவில் கலந்துகொண்ட ஹோலிவுட் நடிகர் ஜேமி ஃபோக்ஸ், அந்த இரட்டை கொண்டாட்டங்கள் முடிந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஒரு பேட்டியில் அதனைப் பற்றி பேசியுள்ளார்.

“எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார், அவரிடம் பணம் உள்ளது, அவர் என்னை, லியோநார்டோ டிகெப்ரியோ, ஜோனா ஹில் மற்றும் இன்னும் சிலர் – நாங்கள் ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தோம். நாங்கள் ஆஸ்திரேலியாவில் கொண்டாடினோம், பிறகு இன்னொரு விமானம் ஏறி, வேகாஸ் சென்று அங்கும் கொண்டாடினோம். இது பைத்தியக்காரத்தனம்,” என்று பிரிட்டிஸ் தொலைக்காட்சிக்கு ஜோனதன் ரோஸ் அளித்த பேட்டியையும் அது மேற்கோள்காட்டியது.

இந்தக் குழுவினரின் ஆடம்பர சூதாட்ட விழா பற்றி கருத்துரைக்க, தி ஆஸ்திரேலியா , தி ஸ்டார் கசினோவைத் தொடர்புகொண்டுள்ளது, ஆனால் அதன் பேச்சாளர் கருத்து கூற மறுத்துவிட்டார்.

மலேசியாவுக்குத் திரும்பி வந்தால், ஏற்படப்போகும் தாக்கத்திற்கு அஞ்சி, சீனாவின் ஷாங்காயில் உள்ள தனது ஆடம்பர படகான, ஈகுவானிமிட்டியிலும் பெனின்சுலா ஹோட்டலிலும் தனது நேரத்தை லோ கழித்துள்ளதாக நம்பப்படுவதாக, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.