சுவாராம் : முன்னாள் போலிஸ்காரரைக் கைது செய்த போலிசை விசாரியுங்கள்

மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்), ஒரு முன்னாள் போலிஸ் அதிகாரியைச் சட்டவிரோதமாகக் கைது செய்த, போலீஸ்காரர்களை விசாரிக்க வேண்டும் என்று இன்று வலியுறுத்தியுள்ளது.

சமூக ஆர்வலர் எஸ் அருட்செல்வனின் கூற்றுபடி, பாதிக்கப்பட்ட, முகம்மது யாசிட் அப்பாதுரா அப்துல்லா, போலிசாரால் கைது செய்யப்பட்ட அந்த இரவில் சித்திரவதையும் செய்யப்பட்டுள்ளார்.

சுஹாகாமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு மனுவில், யாசிட் கடந்த நவம்பர் 18-ல், அதிகாலை 3.30 மணியளவில், ஜாலான் தெலாவி பங்சாரில் உள்ள ஒரு காபி கடைக்கு அருகே தனது காரை நிறுத்தியபோதுதான் கைது செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

ஒரு வெள்ளை வேனில் வந்த, சாதாரண ஆடை அணிந்த ஏழு போலீஸ்காரர்கள் அவரைக் கைது செய்ததாக யாசிட் தெரிவித்துள்ளார்.

“ஏன் என்று கேட்டதற்கு, அறிமுகம் இல்லாத ஓர் இந்திய போலிஸ்காரர் என்னை வாயை மூடிக்கொண்டு வேனில் ஏறுமாறு, கோபத்துடன் கூறினார். மேலும், என்னை சிறுநீர் பரிசோதனைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“டிரேவெர்ஸ் காவல் நிலையத்தை அடைந்ததும், என்னை மீண்டும் ஏசினர். ஒரு மேஜையை, படி வழியாக இரண்டாவது மாடிக்குத் தூக்கிவரும்படி வற்புறுத்தினர். அதனால், என் இடுப்பில் வலி ஏற்பட்டுள்ளது,” என்றார் அவர்.

சட்டவிரோதமாக காரை நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு

டி7 அறையை அடைந்ததும், இன்னொரு அதிகாரி, தன் உடம்பில் பச்சை ஏதும் குத்தப்பட்டுள்ளதா என்று சோதிக்க, சட்டையைக் கழட்ட சொல்லியதாக யாசிட் தெரிவித்தார்.

“என்னை எதற்காக கைது செய்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, நான் தவறான இடத்தில் காரை நிறுத்தியதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

“நான் அவ்வாறு செய்யவில்லை என்றும் , அது ஒரு பொது இடம், நான் அங்கு நின்றுகொண்டிருந்தேன் அவ்வளவுதான், என்றும் அவரிடம் கூறினேன்.

“என் விளக்கங்களைக் கேட்க அவர்கள் தயாராக இல்லை, என்னை வாயை மூடச்சொல்லி ஏசினர்,” என்று யாசிட் கூறினார்.

மேத்தியு எனப்படும் ஒரு போலிஸ்காரர், ஏன் இஸ்லாத்துக்கு மாறினாய் என்று கேட்டு, அவரை அவமதித்ததாகவும் யாசிட் தெரிவித்தார்.

ஏன் இஸ்லாத்துக்கு மாறினாய் என்று கேட்டனர்

“நான் ஏன் ஒரு மலாய் பெண்ணைத் திருமணம் செய்து, இஸ்லாத்தை தழுவினேன் என்று எனது தனிப்பட்ட விஷயத்தைப் பற்றி கேட்டனர்.

“என் வாக்குமூலத்தை எடுத்த பின்னர், கைது செய்யப்பட்ட நபரின் உரிமைகள் தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திடச் சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தினர். எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், பாதுகாப்பு கருதி நான் அதில் கையெழுத்திட்டேன்,” என்றும், பிறகு தன்னை ஜிஞ்சாங் லோக்காப்பிற்கு அனுப்பியதாகவும் யாசிட் சொன்னார்.

நவம்பர் 19-ல், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட யாசிட்டுக்கு எதிராக, 3 நாள்கள் தடுப்புக்காவல் கேட்டு விசாரணை அதிகாரி (ஐஓ) மனு செய்துள்ளார்.

இருப்பினும், தான் எதற்காகக் கைது செய்யப்பட்டேன் என்று ஐஓ-விற்கே தெரியவில்லை என்பதால், மாஜிஸ்திரேட் அவரின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

விடுவிக்கப்பட்ட அதே நாளில், பொது புகார் பிரிவுக்கும் மனித வளத்துறை அமைச்சுக்கும் யாசிட் ஒரு புகாரைச் செய்துள்ளார்.

தனக்கு வழக்கறிஞரை நியமிக்க வாய்ப்பளிக்கவில்லை என்றும், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதால், தான் வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், அச்சம்பவம் தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, சுஹாகாம் ஒரு சுயாதினமான விசாரணையை நடத்த வேண்டும் என்று சுவாராம் கேட்டுக்கொண்டது. யாசிட்டைக் கைது செய்த அதிகாரிகள்,  போலிஸ்காரர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

“அதிகார துஸ்பிரயோகம் மற்றும் கைதிகளிடம் முறைகேடாக நடந்துகொள்வது பற்றி, சுஹாகாம் தேசியக் காவல்படைத் தலைவரிடமும் உள்துறை அமைச்சுடனும் கலந்து பேச வேண்டும்,” என்றும் எஸ். அருட்செல்வன் கூறினார்.