ஆர்ஓஎஸ் பதிவை இரத்துச் செய்தால்கூட வேறு திட்டங்கள் உண்டு- மகாதிர்

பக்கத்தான்     ஹரபான்     தலைவர்     டாக்டர்   மகாதிர்    முகம்மட்,   சங்கப்  பதிவகம் (ஆர்ஓஎஸ்)  பக்கத்தான்  ஹராபானைப்  பதிவுசெய்ய   மறுக்கும்  பட்சத்தில்     தங்களிடம்   மாற்றுத்  திட்டங்கள்  இருப்பதாகக்  கூறுகிறார்.

இன்று  காலை   அவருடைய   வலைப்பதிவில்    பதிவிட்டிருக்கும்    முன்னாள்  பிரதமர்,  14வது   பொதுத்   தேர்தலில்    எதிரணிக்  கூட்டணி  கடுமையான    போட்டி  கொடுப்பதைத்   தடுக்க  பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்கின்   அரசாங்கம்    எல்லா   வழிகளிலும்   முயல்வதாகக்  குறிப்பிட்டார்.

“அதற்காக   அரசாங்கம்    பக்கத்தான்   ஹரபான்  கூட்டணியின்  பதிவை  மறுக்கலாம் ,   தாமதப்படுத்தலாம்,   பெர்சத்துவைப்  பதிவுஇரத்துச்   செய்யலாம்.

“ஆனாலும்  நஜிப்புக்குத்  தோல்வி  நிச்சயம். எதிரணியிடம்    பி   திட்டம்  உண்டு  சி  திட்டம்      உண்டு”,  என்றாரவர்.  ஆனால்,  அவற்றை    அவர்  விவரிக்கவில்லை.

பிரிமுக்கு  அதிகம்  செலவிட   அரசாங்கம்  முடிவு  செய்துள்ளதையும்   மகாதிர்   சாடினார்.

“இது  கையூட்டுத்தான்.  சட்டத்தைமீறும்  அப்பட்டமான  கையூட்டு.

“இதற்கான  பில்லியன்கள்   எங்கிருந்து  வரப்  போகின்றன?

“அரசாங்கம்   கடன்  வாங்கக்  கூடும்.  ஆனால்  அதைத்   திருப்பிக்  கொடுக்க  வேண்டுமே.  கொடுக்காவிட்டால்  நாடு   நொடித்துப்போனதாக   அல்லவா   அறிவிக்கப்படும்.   நஜிப்  நாட்டைத்   திவாலாக்கப்   பார்க்கிறார்”,  என்று  மகாதிர்   சாடினார்.