தன் மகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய மீண்டும் ஒரு சவப் பரிசோதனை செய்ய வேண்டுமென டச்சு மாடல் அழகியின் தந்தை மலேசிய போலீசைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இவானா எஸ்தர் ரோபர்ட் ஸ்மித்,19, டிசம்பர் 7-ஆம் நாள் டாங் வாங்கி கொண்டோமினியத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
அவருடைய இறப்பு திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், அவரின் குடும்பத்தார் அவருடைய இறப்பு குறித்து சந்தேகம் கொள்வதால் அதன்மீது மறுவிசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இவானாவின் தந்தை மார்சல் ஸ்மித், மீண்டும் ஒரு சவப் பரிசோதனை நடத்த முகம்மட் பர்ஹான் ஷாபி மூலமாக கோரிக்கை விடுத்திருப்பதாக த மலாய் மெயில் கூறுகிறது.
“என் மகளின் இறப்பில் எதுவும் விடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்திக்க்கொள்ளவே இந்த இரண்டாவது பரிசோதனை.
“இரண்டாவது பரிசோதனை தொடர்பில் போலீஸ் அனுமதிக்கு முறைப்படி மனுச் செய்யுமாறு என் வழக்குரைஞர்களிடம் கூறியுள்ளேன்.
“ டச்சு மருத்துவர் ஒருவரை அழைத்து வரவும் ஏற்பாடு செய்வேன். அவர் இறப்புக்கான காரணத்தை ஆராயும் உள்ளூர் மருத்துவர்களுக்கு உதவியாக இருப்பார்.
“20வது மாடியிலிருந்து விழுவதற்கு முன்பே அவர் இறந்து விட்டாரா என்பது தெரிய வேண்டும். அப்படி நடந்திருந்தால் வழக்கே திசை திரும்பிவிடும்”, என்று ஸ்மித் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவானாவின் உடலில் காணப்படும் காயங்களுக்கு விளக்கம் கோருகிறார் ஸ்மித்.
“அவருடைய கழுத்துப் பகுதியில் நீல நிற கருப்புநிற பொட்டுகளையும் காயங்களையும் (கோலாலும்பூர் மருத்துவமனை) பிணவறையில் என் மனைவியும் மகனும் ஒரு நண்பரும் நானும் பார்த்தோம்.
“அவை எப்படி வந்தன என்பதற்கு எந்த விளக்கமும் கொடுக்காதது ஏன்?” என்றவர் வினவினார்.
இவானாவின் உடலை அடையாளம் காண்பிக்க சில மணி நேரம் மருத்துவ மனையில் காத்திருக்க வேண்டியதாயிற்று என்று கூறிய ஸ்மித் இறப்புக்கான காரணத்தை விவரிக்கும் அறிக்கையைக் கொடுப்பதற்கும் அதிகாரிகள் மறுத்து விட்டார்கள் என்றார்.