இந்தியச் சமூகத்தால் முதலீடு செய்யப்பட்ட ரிம100 மில்லியனுக்கும் அதிகமான நிதி மோசடி சம்பந்தப்பட்ட, மைக்கா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் (மைக்கா ஹோல்டிங்ஸ்) பங்குகள் இழப்பு பற்றி ஆய்வு செய்ய, அரச விசாரணை ஆணையம் (ஆர்.சி.ஐ.) அமைக்கச்சொல்லி, பிகேஆர் இன்று அழைப்புவிடுத்தது.
காரணம், மஇகாவின் துணை நிறுவனமான அதில், பல பங்குதாரர்கள் தங்கள் முதலீட்டு வருமானத்தைப் பெறவில்லை, அதுமட்டுமின்றி பெரும்பாலானோர் தங்கள் பங்கு பணத்தை இழந்துள்ளனர் என்று பிகேஆர் இளைஞர் பிரிவைச் சேர்ந்த எ. குமரேசன் கூறினார்.
“தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருவாய் பெற்றவர்கள் என, கிட்டத்தட்ட 66,400 பங்குதாரர்கள், தங்கள் குடும்ப நகைகளை அடமானம் வைத்து, தங்கள் சேமிப்பு பணங்களைக் கொடுத்து, மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குகளில் ரிம106 மில்லியனுக்கு முதலீடு செய்தனர்.
“எனினும், மைக்கா பங்குகள் அவர்கள் எதிர்பார்த்தபடி நடைமுறைப் படுத்தப்படவில்லை,” எனக் குமரேசன் கூறினார்.
1982-ஆம் ஆண்டில், இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்கள் பங்கேற்கவும், அப்போதைய ம.இ.கா. தலைவர் துன் சாமிவேலுவால் மைக்கா ஹோல்டிங்ஸ் உருவாக்கப்பட்டது.
இருப்பினும், முதலீட்டாளர்களில் சிலர், வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் திவால் ஆனதுதான் மிச்சம் என்று குமரேசன் கூறினார்.
“எனவே, ஆர்.சி.ஐ. அமைத்து, மைக்கா ஹோல்டிங்சை விசாரிக்க வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்,” என்று குமரேசன் கூறியுள்ளார்.