பாடாங் செராய்-ஐச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், 15 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த இழப்பீட்டுத் தொகையைப் பெற, எதிர்வரும் திங்கட்கிழமை காலை, பிரதமரின் அலுவலகத்தின் முன்னால் ஒன்றுகூட உள்ளனர்.
“பாடாங் மேஹா முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள், பிரதமர் மற்றும் அலமண்டா டெவலப்மென்ட் சென். பெர்ஹாட் சம்பந்தப்பட்ட ஒரு முத்தரப்பு கூட்டத்தில் கலந்துபேசி, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாங்கள் விரும்புகிறோம்,” என பாடாங் மேஹா தோட்ட நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.கார்த்திகேஸ் நாம் தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.
“சந்திப்பிற்கான ஒரு தேதியை, பிரதமரின் அலுவலகம் வழங்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்.
“சரியான பதில் கிடைக்கவில்லை என்றால், 3 நாட்களுக்குக் கூட இந்த ஆர்ப்பாட்டம் தொடர வாய்ப்புள்ளது,” என்றும் மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்) மத்திய செயலவை உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
முன்னதாக, அத்தோட்டத் தொழிலாளர்கள் நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 13-ம் தேதிகளில், பேச்சுவார்த்தை நடத்த ஒருநாள் கேட்டு, கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஆனால், பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
கெடா, பாடாங் செராயில் அமைந்திருக்கும், பாடாங் மேஹா தோட்ட முன்னாள் தொழிலாளர்கள், 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் போராடி வருகின்றனர்.
கடந்த மார்ச் 12, 1995-ல், பாடாங் மேஹா தோட்டம் விற்கப்பட்டதைத் தொடர்ந்து, 212 தொழிலாளர்கள் எந்த இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படாமல், வேலையில் இருந்து நிறுத்தப்பட்டனர். அவர்களில் 207 பேர், தங்களுக்கு வீடு மற்றும் இழப்பீட்டுத் தொகை வேண்டுமெனக் கோரி, எம்.பி.ஃப். கன்ட்ரி ஹோம்ஸ் & ரிசோட் சென்.பெர். கீழ் இயங்கும் ‘தி ஈஸ்ட் ஆசியடிக் கம்பெனி (ம) (அதன்பிறகு அல்மன்டா டெவலப்மன்ட் சென்.பெர். அறியப்பட்டது) நிறுவனத்தின் மீது, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இவர்களின் நீதிமன்ற வழக்கு, இறுதியில் வெற்றி பெற்றது. கடந்த 2011-ம் ஆண்டு, இழப்பீட்டுத் தொகையோடு, மேற்படி வீட்டிற்கு ரிம 22,500 வழங்க நீதிமன்றம் உத்தவிட்டது.
இருப்பினும், அந்நிறுவனம் திவாலாகிவிட்டது எனக்கூறி, இன்றுவரை அவர்களுக்கு எந்தவொரு இழப்பீட்டுத் தொகையும் கொடுக்கப்படவில்லை. பலமுறை இதுகுறித்து திவால் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முன்னேற்றமும் இல்லை.
ஆனால், அத்தோட்டத்தின் பெரும்பகுதி நிலம், மேம்பாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. தோட்ட மக்களில் ஒரு பகுதியினர், அலமண்டா நிறுவனத்தை நீதிமன்றத்தில் நிற்க வைத்து, முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை நிறைவேற்ற வழி காண முயற்சிக்கின்றனர்.
அலமண்டா நிறுவனம், இப்பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வை வழங்க முன்வந்தால், நீதிமன்ற வழக்கை மீட்டுக்கொள்ள தயாராக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அலமண்டா நிறுவனம் பேச்சு வார்த்தைக்கு முன்வர தயாராக இல்லை.
பி.எஸ்.எம். கடந்த 22 வருடங்களாக இத்தோட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வருகிறது. இழப்பீடு கோரும் 207 தொழிலாளர்களில் 70 பேருக்கும் மேல் இன்றில்லை, இறந்துவிட்டனர். இவர்களில் அதிகமானோர் வயதானவர்கள், இன்னும் 20 வருடங்கள் இவர்களால் காத்திருக்க முடியாது என்று கார்த்திகேஸ் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 29-ம் தேதி, பாடாங் மேஹா முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள், தங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க ஒரு காலகெடு கேட்டு, அத்தோட்ட வளாகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
22 ஆண்டுகளாக நீடித்துவரும் இப்பிரச்சனையில், அரசாங்கம் தலையிட்டு ஒரு நல்ல தீர்வை வழங்க வேண்டும் எனவும் அத்தொழிலாளர்கள் அரசாங்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இதுவரை எதுவுமே நடக்காத பட்சத்தில், எதிர்வரும் திங்கட்கிழமை அவர்கள் பிரதமர் அலுகத்தின் முன் மறியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.
இதற்கெல்லாம் மக்கள் காவலன் என்று சொல்லி திரியும் ம.இ.கா.காரன் எவனும் முன்வரமாட்டான் பாதிக்கப் பட்ட நீங்களே போராடுங்கள் அதிலும் நீங்கள் அனைவரும் அந்த தொகுதி வாக்காளர்களா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள் அதுதான் மிக முக்கியம்…
தேர்தல் சமயத்தில் ஆர்ப்பாட்டங்கள் செய்தால் எல்லாம் நடக்கும் என்றால் இந்நேரம் ஏதோ ஏதோ நடந்திருக்குமே!