நஜிப் சிறீ லங்கா சென்றடைந்தார்

 

மூன்று நாள் அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டு பிரதமர் நஜிப் இன்று சிறீ லங்கா சென்றைடந்தார்.

பிரதமர் நஜிப்பையும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூரையும் ஏற்றி வந்த சிறப்பு விமானம் பண்டாரநாய்க் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ளூர் நேரம் காலை மணி 8.40 அளவில் இறங்கியது.

பிரதமர் நஜிப்பையும் அவரது பரிவாரத்தையும் சிறீ லங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனா, மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் மலேசிய ஹைகமிஷன் அதிகாரிகள் வரவேற்றனர்.

சிறீ லங்காவில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கும் பிரதமர் நஜிப், சிறீ லங்காவின் அதிபர் மைதிரிபாலா சிறீசேனாவையும் சந்திக்கிறார்.

பிரதமர் நஜிப்புடன் அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில் அமைச்சர் முஸ்தாபா முகமட், சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம், பிரதமர்துறை அமைச்சர் அஸலீனா ஓத்மான் சைட், துணை வெளிவிவகார அமைச்சர் ரீஸால் மரிக்கான் னைநா மரிகான் மற்றும் மலேசியாவின் தென்ஆசியாவுக்கான சிறப்புத் தூதர் ச. சாமிவேலு ஆகியோரும் இருந்தனர்.

இரண்டு அரசாங்கங்களுக்கும் மற்றும் தனியார்துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் இடையில் செய்துகொள்ளவிருக்கும் பல புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியிலும் நஜிப் கலந்துகொள்கிறார்.

சிறீ லங்காவிலுள்ள மலேசியர்களை சந்திப்பதோடு சிறீ லங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அளிக்கும் மதிய உணவு உபசரிப்பிலும் பங்கேற்ற பின்னர் பிரதமர் நஜிப் வரும் செவ்வாய்க்கிழமை மல்தீவ்ஸ் செல்கிறார்.