பிணப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதால், வாங் கிலியானில் 70% கடைகள் மூடப்பட்டன

வார இறுதியில், பார்வையாளர்களை அதிகம் ஈர்த்துவந்த பெர்லிஸ் – வாங் கெலியான், பிணப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக, கடந்த 2015, ஏப்ரல் 1-ல் தடையற்ற போக்குவரத்து வளாகம் (free flow zone) மூடப்பட்டதால், தற்போது வாழ்வா சாவா எனும் நிலையில் உள்ளது எனப் பெர்லிஸ் மாநில மலேசியச் சுற்றுலாத்துறை அதிகாரி கூறினார்.

1993-ம் ஆண்டு முதல், மலேசியா-தாய்லாந்து எல்லை, தடையற்ற போக்குவரத்து வளாகமாக விளங்கியதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட இரு நாட்டு மக்களும், சுமார் 1 கிமீ தூரம் வரை வாங் கெலியானிலும் வாங் பிராச்சான், சாதுனிலும் ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடிநுழைவில் கடவுச்சீட்டு இல்லாமல் உட்புகுந்து வெளியேறி வந்தனர்.

பாதுகாப்பு கறுதி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் அந்தச் தடையற்ற போக்குவரத்து வளாகத்தின் காரணமாக, வாடிக்கையாளர்கள் குறைந்து போய், வர்த்தகர்கள் பெரிய இழப்புக்களை எதிர்நோக்கியதால், இரண்டு நாட்டு எல்லைகளிலும் இருந்த சுமார் 70% கடைகள் மூடப்பட்டுவிட்டன என்று ஷாரோல் ரிஷால் அஹ்மாட் தெரிவித்தார்.

“அரசாங்கம் தடையற்ற போக்குவரத்து வளாகங்களை முடக்கியுள்ளதால், இரு நாடுகளிலும் கொள்முதல் செய்ய சட்டப்பூர்வமான பயண ஆவணங்கள் (கடவுச்சீட்டுகள்) பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தப்படுவதோடு; கடுமையான விதிகளும் சுமத்தப்படுவதால், வருகையாளர்களை இது சிக்கலுக்குள்ளாக்கிறது.

“அங்குச் செல்லும் சுற்றுப்பயணிகள் மற்றும் வருகையாளர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டுள்ளது,  இதற்கு முன்னர், சுறுசுறுப்பாக நடந்து வந்த பல நடவடிக்கைகள் தற்போது குறைந்துவிட்டன,” என அவர் ஃப்.எம்.தி.-இடம் கூறினார்.

2015-ஆம் ஆண்டு, ஆள் கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்ட 130 பேரின் சடலங்களைக் கண்டுபிடித்ததன் காரணமாக, இந்தத்  தடையற்ற போக்குவரத்து வளாகத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டது.

ஜனவரி 2015 தொடக்கமே, தாய்-மலேசியா எல்லையில் உள்ள வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அந்தப் பிணக் குவியல் பற்றி போலிசாருக்குத் தெரியும், ஆனால் அவ்வாண்டு மே 25-ம் திகதிதான் போலீசார் அதனை அறிவித்தனர் என்ற நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்-சின் (என்.எஸ்.டி.) செய்தியைத் தொடர்ந்து, கடந்த செவ்வாயன்று இந்தச் சம்பவம் ஊடகங்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, என்.எஸ்.டி. மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், அச்சம்பவ இடம் சுத்தம் செய்யப்பட்டு, பல்வேறு குற்றச் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும்; வேண்டுமென்றே பல்வேறு குற்றச்சாட்டு அறிக்கைகள் திருடப்பட்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ விசாரணைகளில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு தரப்புகளுடனான நேர்காணல்களின் போது கண்டறியப்பட்டது என அச்செய்தித்தாள் குற்றச்சாட்டியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக இருண்டு கிடக்கும் வாங் கெலியானின் சூழ்நிலைக்குப் புத்துயிர் அளிக்க, அரசாங்கம் உள்நாட்டு அமைச்சின் வழி, தாய்-மலேசிய எல்லையில் தடையற்ற போக்குவரத்து வளாகத்தின் முடக்கத்தை ஒரு நிறைவுக்குக் கொண்டுவர வேண்டுமென ஷாரோல் ரிஷால் கேட்டுக்கொண்டார்.

இந்த நடவடிக்கையானது, உள்ளூர் வர்த்தகர்களுக்கு நன்மை அளிப்பதோடு, உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுப்பயணிகளையும் ஈர்க்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.