வெளிநாட்டினர் மீண்டும் நுழைவதைத் தடுப்பதற்காகவே, வாங் கெலியானில் மனிதக் கடத்தல் முகாமையும் பெரியக் கல்லறைகளையும் அழிக்க பெர்லிஸ் போலிஸ் கட்டளையிட்டது.
2015-ஆம் ஆண்டில், அம்முகாமின் கண்டுபிடிப்பை மறைக்க முயற்சித்ததாக குற்றஞ்சாட்டிய, ஆங்கில மொழி பத்திரிகையான நியூஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் –சின் 17 கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, புக்கிட் அமான் இவ்வாறு கூறியது.
“பெர்லிஸ் போலிஸ் துணைத் தலைவரின் உத்தரவின் பேரிலேயே அந்த முகாம் அழிக்கப்பட்டது, வெளிநாட்டவர்கள் நுழைவதையும் அந்தத் தளத்தைப் பயன்படுத்துவதையும் தடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அது அழிக்கப்பட்டது.
“அந்தப் பகுதியைப் பாதுகாப்பதோ அல்லது அந்த முகாமை அழிக்காமல் இருப்பதோ எங்கள் தேவையில்லை, காரணம் அந்நேரத்தில் வழக்கு குடிநுழைவுத் துறையின் குற்றமாக இருந்தது.
“முகாமினை அழித்த முக்கிய நோக்கம், வெளிநாட்டினரால் அது ஒரு தளமாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கே,” எனப் போலிஸ் தெரிவித்தது.
முகாம் ஏன் உடனடியாக சுற்றி வளைக்கப்படவில்லை, கல்லறைகள் ஏன் தோண்டப்படவில்லை என்ற கேள்விக்கு, முகாம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அந்த முழு பகுதியும் செயல்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது என்று புக்கிட் அமான் பதிலளித்தது.
“கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகள் குறிக்கப்பட்டன, அப்பகுதியில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்த பின்னரே, கல்லறைகளைத் தோண்ட முடியும். அப்பகுதி சரியானது என்று நம்பப்பட்ட பிறகுதான், விசாரணை மற்றும் தடயவியல் குழுக்கள் அங்கு அனுமதிக்கப்படும்,” என்று அது விளக்கியது.
செங்குத்தான நிலப்பரப்பு மற்றும் வெடிமருந்துகள் பதிக்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியமும் இருந்ததால், அப்பகுதிக்குள் நுழைவதற்கு முன்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளும் கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டது எனப் போலிஸ் மேலும் கூறியது.
இதற்கிடையில், இந்த ஆள் கடத்தல் வழக்கில், போலிஸ் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர் எனும் சந்தேகத்தைப் புக்கிட் அமான் மறுத்தது.
“இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை,” என்று, போலிசார் யார்மீதேனும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்குப் போலிஸ் தரப்பு பதிலளித்தது.
இருப்பினும், சட்டவிரோத மனிதக்கடத்தல் சட்டப்பிரிவு 26A மற்றும் குடியேறிகளுக்கு எதிரான கடத்தல் (அதிப்சோம்) 2007 (சட்டப்பிரிவு 670) கீழ் 4 தனிநபர்கள் விசாரிக்கப்பட்டதாக புக்கிட் அமான் தெரிவித்தது.
மேலும், சந்தேகத்திற்குரிய 10 தாய்லாந்து நாட்டினரையும் ஒரு வங்களாதேசியையும் தேடிவருவதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
கடந்த புதன்கிழமை, நியூஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், “வாங் கெலியான் சம்பவம் மூடிமறைக்கப்பட்டதா?” என்ற தலைப்பில், செய்தி ஒன்றை வெளியிட்டது.
அச்சம்பவம் தொடர்பான விசாரணையின்போது, பல்வேறு சான்றுகளை அழித்து, அறிக்கைகளையும் பிற ஆவணங்களையும் மாற்றியமைத்து, வழக்கை மூடிமறைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது என்று அச்செய்தியில் அது குற்றஞ்சாட்டி இருந்தது.
அதன் தொடர்பில், மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) வாங் கிலியானிலுள்ள பெரிய கல்லறைகள் பற்றியத் தகவல்களைப் பெற, தாய்லாந்து மனித உரிமை இயக்கங்களைத் தொடர்புகொள்ள இருப்பதாகக் கூறியிருந்தது.
மே 1, 2015-ல், அந்த ஆள்கடத்தல் முகாம் மற்றும் பெரிய கல்லறைகள் குறித்த தகவல்களை, மலேசிய அதிகாரிகளுக்கு தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் பின்னர், நாட்டு எல்லைகளை ஆராய்ந்த பாதுகாப்புப் படையினர், மே 24-ல், 139 கல்லறைகளையும் அதுபோன்ற பல முகாம்களையும் கண்டுபிடித்தனர்.