அமனா: நஜிப்புக்கு முகத்துதி செய்ய ஹாடி ஹரப்பான் பிரதமர் வேட்பாளரைச் சாடுகிறார்

 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தங்களுடைய பிரதமர் வேட்பாளர்களை அறிவிக்கும் கட்சிகளை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இடைவிடாது தாக்கி வருவது பிரதமர் நஜிப்புக்கு முகத்துதி செய்வதற்குத்தான் என்று ஓர் அமனா தலைவர் கூறுகிறார்.

ஹாடி பேசுவதெல்லாம் 14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் அம்னோவுக்கு புத்துயிர் அளிப்பதற்காகத்தான் என்று அமனா ஷரியா இயக்குனர் ஸோல்ஹர்னைன் அபிடின் கூறுகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை, தற்காலிக பிரதமரை பெயர் குறிப்பிடும் வழக்கம் இறைத்தூதர் முகமட்டின் போதனைகளுக்கு முரணானது என்று ஹாடி கூறினார்.

இது பிரதமர் நஜிப்புக்கு ஆறுதல் அளிக்கும், ஏனென்றால் வேறொருவரின் பெயர் பிரதமர் பதவிக்கு குறிப்பிடுவது இஸ்லாமிய வழக்கத்திற்கு எதிராகிவிடும் என்று ஸோல்ஹர்னைன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

ஒரு வேட்பாளரின் பெயர் குறிப்பிடப்படுவது எந்த இஸ்லாமிய கோட்பாடுகளை மீறுகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பாஸ் அதன் வேட்பாளரின் பெயரைக் குறிப்பிட விரும்பாவிட்டாலும், அது மற்றவர்கள் செய்வதை இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறி தடுக்கக்கூடாது என்றாரவர்.

‘பாஸ் அதைச் செய்திருக்கிறது’

நேற்று, சமயப் போதகர் வான் ஜி வான் ஹுசேன் 13 ஆவது பொதுத் தேர்தலின் போது அப்போதைய பக்கத்தான் ரக்யாட்டின் பிரதமர் வேட்பாளராக குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலி ஹம்சாவின் பெயரை பாஸ் முன்மொழிந்ததைச் சுட்டிக் காட்டி ஹாடியின் தற்போதைய அறிக்கையைச் சாடினார்.