மலேசியப் பொறியியலாளர், துபாயில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

சம்பளப்பணத்தைத் திருடிவிட்டார் எனும் சந்தேகத்தின் பேரில், கடந்த ஏப்ரல் மாதம்  துபாயில் கைது செய்யப்பட்ட மலேசியப் பொறியியலாளர் ரிச்சர்ட் லாவ், விசாரணைக்காக இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் துபாய்க்கான மலேசியத் துணைத் தூதரகச் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

“வழக்குத் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களை அறிய, தூதரகம் எப்போதும் அவரின் குடும்பத்தார் மற்றும் வழக்கறிஞர்களுடன் தொடர்பில் இருக்கிறது,” என்று அவர் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

மிரியைச் சேர்ந்த, மலேசியக் கடல் போக்குவரத்து நிறுவனத்தின் துணை நிறுவனத்தில் பணிபுரிய, 41 வயதான லாவ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யூஏஈ) க்கு வடக்கில் இருக்கும் ராஸ் அல் கைமாவுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்டார் என ஒரு பத்திரிக்கை நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

அச்செய்தியின்படி, கடந்த ஏப்ரல் 28-ல் அவர் கைது செய்யப்பட்டார், அந்தத் துணை நிறுவனத்தின் ஒரு பங்காளியான, ஐக்கிய அரபு எமிரேட்டின் குடிமகன் ஒருவர், லாவ் சம்பளப் பணத்தைத் திருடிவிட்டார் எனக் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், வெளியுறவு அமைச்சு லாவ்-வின் வழக்கை நெருக்கமாக கண்காணித்து வருவதாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“அமைச்சும் துபாயில் இருக்கும் தூதரகமும், இவ்வழக்கின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதோடு, லாவ்-வின் நலனில் எப்போதும் விழிப்புடன் இருக்கும்; அவருக்குத் தேவையான உதவிகளை வழங்குவதையும் உறுதி செய்யும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வெளிநாட்டில் இருக்கும் மலேசியர்களின் நலனுக்கு, எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும்,” என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.