பொதுத் தேர்தலில் வாக்குகளை வென்றெடுப்பதற்காக, அரசாங்கம் சில இடங்களில் இராணுவ அதிகாரிகளை வைக்கவில்லை, மாறாக பாதுகாப்பு தேவை மற்றும் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உத்திகளை அது அடிப்படையாகக் கொண்டது.
ஜொகூரின் சில பகுதிகளில், இராணுவ முகாம்களைக் கட்டியெழுப்புவது நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு அவமதிப்பு எனக் கூறிய ஜொகூர் டிஏபி தலைவர் லியு சின் தோங்கின் கருத்து தொடர்பாக பேசியபோது, பாதுகாப்பு அமைச்சின் துணையமைச்சர் ஜொஹாரி பஹாரோம் இவ்வாறு கூறினார்.
நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன் மற்றும் பேராக், லுமூட்டில் அரசாங்கம் பெரிய மற்றும் முழுமையான இராணுவ முகாம்களைக் கொண்டிருந்தபோதும், போர்ட்டிக்சன் சட்டமன்றத்திலும் லுமுட் நாடாளுமன்றத் தொகுதியிலும் பாரிசான் நேசனல் தோற்றுதான் போனது என்று ஜொஹாரி மேலும் தெரிவித்தார்.
“ஆக, பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, ஓர் இராணுவ முகாமை உருவாக்கும் எந்த நேரடி நோக்கத்தையும் திட்டமிடலையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை, அதில் உண்மை ஏதுமில்லை,” என்று நேற்று அவர் தெரிவித்தார்.
கடந்த வியாழனன்று, ஹிஷாமுடின் பிரதிநிதிக்கும் செம்புரோங் நாடாளுமன்றத் தொகுதியில் ஓர் இராணுவ முகாம் நிறுவப்படுவதான குற்றச்சாட்டைப் பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் மறுக்கமுடியுமா என, லியு சவால் விடுத்ததாக ஒரு வலைப்பக்கம் செய்தி வெளியாக்கியது.
தேசியச் சேவை பயிற்சி மையம் உட்பட, அவசியமான இடங்களில் – எங்கு வேண்டுமானாலும், பாதுகாப்புப் பணியாளர்களை நியமிப்பது மற்றும் தேசியப் பாதுகாப்புப் பணியுடன் தொடர்புடைய எந்தவொரு பிரச்சினையையும் அவரின் அமைச்சு சகித்துக்கொள்ளாது என்று குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.