ஜாலான் செமாராக், கோலாலம்பூரில் உள்ள பெல்டாவிற்குச் சொந்தமான நிலப் பரிமாற்றப் பிரச்சினையை விசாரிக்க, அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) தேவையில்லை, காரணம் அது ‘நேரடியான’ வழக்காக உள்ளது என பாஸ் கருதுகிறது.
பாஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர், தகியுட்டின் ஹாசான், மலேசியக் காவற்படை (பிடிஆர்எம்) மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இரண்டும், வழக்கின் காலவரிசையைக் கவனமாகப் பார்த்து, ஆராய வேண்டும் என்று கூறியுள்ளார்.
“பெல்டா இயக்குநர்கள் குழுவின் முடிவு, பெல்டாவிற்கும் அதனுடன் தொடர்புடைய நிறுவனத்திற்கும் இடையேயான உடன்படிக்கை, நிறுவனத்தின் பரிவர்த்தனை பரிமாற்றங்கள் மற்றும் ஒப்பந்த தரப்பினரின் இணக்கங்கள் ஆகியவற்றைக் கவனமாக ஆராய வேண்டும்,” என்றார் அவர்.
முன்னதாக, உள்ளூர் ஊடகங்கள், 2015-ஆம் ஆண்டில் நடந்த ஒரு பரிவர்த்தனைக்குப் பின்னர், ஜாலான் செமாராக்கில் ரிம270 மில்லியன் மதிப்புள்ள நில உரிமையைப் பெல்டா இழந்துவிட்டது, இது “சந்தேகத்திற்குரியது” என்று செய்திகள் வெளியிட்டன.
ஒரு சுதந்திரமான மதிப்பீட்டின்படி, அந்நிலத்திற்கான தற்போதைய சந்தை விலை 1 பில்லியன் ரிங்கிட் ஆகும்.
இந்த நிலம் தற்போது, ஏழு கோபுரங்களை உள்ளடக்கிய கோலாலம்பூர் வெர்டிகல் சிட்டி (கேஎல்விசி) திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் பெல்டா கோபுரம் ஒன்று, 59 மாடி அலுவலகங்கள் மற்றும் ஹெலிபாட் கொண்ட 68 மாடி கட்டடங்களும் அடங்கும்.
இதற்கிடையில், இந்தப் பிரச்சினை பொது நலன் மற்றும் முக்கியப் பங்குதாரர்கள், குறிப்பாக பெல்டா குடியேறிகள் மற்றும் அவர்தம் தலைமுறையினர் தொடர்புடையது என்பதால், கட்சியின் ஆலோசனையைப் பின்பற்றினால், விரைவாக விசாரிக்க முடியும் என்றும் தகியுட்டின் தெரிவித்தார்.
“இவ்வழக்கு மீதான விரிவான விசாரணை, பெல்டா மற்றும் அதன் துணை நிறுவனங்கள் தொடர்புடைய மற்றெந்த ஊழல்களையும் தகர்க்க உதவும் என்று பாஸ் நம்புகிறது.
“இதன் மூலம், ஓர் அறக்கட்டளை நிறுவனமாக பெல்டா, சில குழுக்களின் தனிப்பட்ட நலன்களில் இருந்து நீக்கப்பட முடியும்,” என கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.