‘சிலாங்கூர் பாஸ் பிரதிநிதிகள் ஹாடி விசுவாசிகள்’

சிலாங்கூரின்  இப்போதைய  பாஸ்  சட்டமன்ற  உறுப்பினர்கள்   அனைவரும்    எப்போதும்   கட்சித்   தலைவர்   அப்துல்   ஹாடி  ஆவாங்குக்கு  விசுவாசமாக   இருந்து    வந்துள்ளனர்  என்கிறார்  சிலாங்கூர்  பாஸ்    தலைவர்  இஸ்கண்டர்   அப்துல்  சமட்.

“காஜாங்  நடவடிக்கை”யின்போது  சிலாங்கூர்   மந்திரி  புசாராக   காலிட்  இப்ராகிம்   தொடர்ந்து   பதவி   வகிக்க   வேண்டும்   என்று   ஹாடி  உறுதியாக  இருந்தபோது  பாஸின்  13  சட்டமன்ற  உறுப்பினர்களும்   அவருக்கு  ஆதரவாக  நின்றதிலிருந்தே  அந்த  விசுவாசத்தைத்   தெரிந்து  கொள்ளலாம்.

“எவ்வளவோ   அழுத்தங்கள்   வற்புறுத்தல்கள்   வந்தபோதும்  இருவர்  தவிர  இந்த   13பேரும்  மனம்  மாறவில்லை”,  என  இஸ்கண்டர்  கூறினார். அந்த  13  பேரில்  அவரும்   ஒருவர்.

கட்சித்தொடர்பைத்  துண்டித்துக்கொள்ளாவிட்டால்  பாஸ்  சட்டமன்ற  உறுப்பினர்கள்   அவர்களின்  பதவிகளை  இழக்க  நேரும்   என்பது  குறித்து  அவர்கள்  கவலைப்படவில்லை  என்றாரவர்.

“அப்படிக்  கவலைப்பட்டிருந்தால்   அவர்கள்  உலு  கிளாங்  (சாஆரி  சுங்குய்ப்,  மோரிப் ( ஹஸ்னுல்  பஹாருடின்)    சட்டமன்ற  உறுப்பினர்களைப்  பின்பற்றி  இருப்பார்கள்”,  என்றார்.

டிசம்பர்  23-இல்,  த   மலேசியன்  இன்சைட், பாஸில்  கட்சித்தாவல்  நடக்கப்போவதாக    ஆருடம்  கூறியிருந்தது.

கட்சியின்  போக்கு  பிடிக்காத  பலர்   அதிலிருந்து   விலகப்  போவதாக   அது  கூறி  இருந்தது.  பாஸ்  தலைவர்கள்   இதை  மறுத்தார்கள்.

பாஸுக்கும்  பிகேஆருக்கும்   தேசிய   நிலையில்   எந்தத்  தொடர்பும்  இல்லை   என்றாலும்     பிகேஆரால்   வழிநடத்தப்படும்  சிலாங்கூர்   அரசில்   அது   இன்னமும்   அங்கம்  வகிக்கிறது.

எதிர்வரும்  பொதுத்  தேர்தலில்  சிலாங்கூர்  முழுக்க   வேட்பாளர்களைக்  களமிறக்கப்போவதாக   பாஸ்  தலைவர்கள்   திரும்பத்   திரும்பக்   கூறி  வருகின்றனர்.

இதனிடையே   பாஸ்   துணைத்    தலைவர்    துவான்  இப்ராகிம்  துவான்  மான்  ஒரு   தனி    அறிக்கையில்,  பொதுத்  தேர்தல்   நெருங்க  நெருங்க இப்படிப்பட்ட   அவதூறுகள்   நிறைய   வரும்    என்று  கூறியிருந்தார்.

கட்சித்  தலைவர்களும்  உறுப்பினர்களும்  அவற்றைப்  பொருள்படுத்தாது   தேர்தலுக்கான   ஏற்பாடுகளில்  முழுக்  கவனம்   செலுத்த   வேண்டும்   என்றவர்  வலியுறுத்தினார்.