இந்நாட்டின் அமைச்சரவை மலாய் – முஸ்லிம் உறுப்பினர்களை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியிருப்பதற்கு டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹாடியின் இக்கூற்று அரசமைப்புக்கு முரணானது என்பதோடு இது மலேசியாவின் சிதைவுக்கு இட்டுச் செல்லும் என்று இன்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
ஹாடியின் மற்றவர்களை ஒதுக்கித் தள்ளும் தன்மையுடைய மலாய் – முஸ்லிம் அமைச்சரவை தெளிவாக அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது, ஏனெனில் அது மலாய்க்காரர்கள் அல்லாதவர்களையும் மலாய்க்காரர் அல்லாத முஸ்லிம்களையும் கீழ்த்தரமான குடிமக்கள் என்ற தகுத்திக்குத் தாழ்த்தி அவர்களுடைய உரிமைகளையும் குறைத்து விடுகிறது என்று குவான் எங் சுட்டிக் காட்டினார்.
தலிபான் போக்குயுடைய இம்மாதிரியான தீவிரவாத மற்றும் இனவாத நிலைப்பாட்டை மலேசியாவில் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
இது போன்ற மிகக் கடும் தீவிரவாத மற்றம் இனவாத நிலைப்பாட்டை எடுப்பதின் வழி, ஹாடி சாபா மற்றும் சரவாக் மாநிலங்களை அச்சுறுத்துவதோடு மட்டுமின்றி அவை மலேசியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கும் வகை செய்கிறார் என்று குவான் எங் கூறினார்.
இது போன்ற அரசியல் கட்சியுடன் அம்னோ உறவு கொள்ள விரும்புகிறது, ஏனென்றால் பிஎன்னின் பெரும் ஊழல்களை பாஸ் கண்டுகொள்ளாமல் இருக்கத் தயாராக இருக்கிறது என்றாரவர்.
கடந்த வெள்ளிக்கிழமை, பாஸின் ஹராக்காவில் அரசின் தலைவர் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களாகவும் மிகச் செல்வாக்குமிக்க இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் நிபந்தனை விதிக்கிறது என்று ஹாடி தெரிவித்திருந்த கருத்துக்கு குவான் எங் எதிர்வினையாற்றினார்.
இஸ்லாம் அதே சமயத்தில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அரசியல், பொருளாதாரம் மற்றும் இதர விவகாரங்களில் அதிக உரிமைகளைக் கொடுக்கிறது என்றும் ஹாடி கூறிக்கொண்டார்.
இஸ்லாமிய அறிஞர் அல்-மாவார்டி என்பவரை மேற்கோள் காட்டி இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்கள் நிருவாகம் சம்பந்தப்பட்டவற்றுக்கு அமைச்சராக நியமிக்கப்படலாம், ஆனால் கொள்கைகள் வகுக்கும் பதவிகளுக்கு இல்லை என்று ஹாடி கூறியிருந்தார்.
முஸ்லிம் அல்லாதவர்களின் நிபுணத்துவம் மற்றும் நிருவாகத் திறமை ஆகியவற்றை முஸ்லிம் தலைவர்கள் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகும் என்று கூறிய ஹாடி, கொள்கைகள் மற்றும் பொதுக் கருத்துகள் ஆகியவற்றில் அவ்வாறு இல்லை என்றார்.
எதிரி விரிக்கும் வலையில் வீனே போய் வீழ்ந்து மாட்டிக் கொள்வானேன்?
நடக்காத ஒன்றை ஹாடி பேசுகின்றார். அதன் நோக்கமென்ன? மலாய்க்காரர் ஆதரவு கொண்ட மற்ற கட்சிகளை விட அவர்தம் கட்சியே ‘சிறந்த’ மதவாதக் கொள்கையுடையென்பதைக் கூறி கொள்கின்றார். அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே!
அதனால் மேற்கு தீபகற்பத்தில் ஒட்டு மொத்தமாக அந்த கட்சி தோற்கப் போகின்றது என்பதை தேர்தல் நேரத்தில் இந்தியருக்கும் சீனருக்கும் புரிய வைத்தால் போதும்.
இப்பொழுதே குட்டையைக் குழப்பி பக்காத்தான் ஹரப்பானுக்கு கிடைக்க வேண்டிய மலாய்க்காரர் வாக்கை ஏன் சிதறடிப்பானேன்? அரசியல் புரியாத அரசியல்வாதி இவர்? அறிவுக்கு வேலை கொடு. பகுத்தறிவுக்கு வேலை கொடு.