பாஸ்: ‘முஸ்லிம் – மட்டுமே அமைச்சரவை’ என்று ஹாடி கூறவில்லை

அமைச்சரவையில் மலாய்-முஸ்லிம்கள் மட்டுமே சேரலாம் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியதாக வெளிவந்துள்ள செய்தியை பாஸ் மறுக்கிறது.

டிசம்பர் 22 இல் ஹாடி வெளியிட்ட ஊடகச் செய்தியில் சில அமைச்சரவை பதவிகள் மலாய்-முஸ்லிம்களுக்கு ஒதுக்கிவைக்கப்பட வேண்டும் என்றுதான் ஹாடி கூறினார் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் நசருடின் ஹசான் கூறுகிறார்.

நசருடின் கூற்றுப்படி, ஹாடி கூறியிருப்பது சில அமைச்சுகளுக்கு மட்டும் பொருந்தும்.

ஹாடி கூறியதில் ஒரு சொல்லோ ஒரு வாக்கியமோ மலாய்-முஸ்லிம்கள் மட்டுமே அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்பதைக் காட்டவில்லை என்று நசருடின் வலியுறுத்தினார்.

ஹாடியின் அறிக்கைக்கு பிஎன் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஸ் தலைவர் முஸ்லிம் அல்லாதவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதாக அவரை குறைகூறினர்.