சேவியர்:  முஸ்லிம்-அல்லாதவர்கள் இல்லாத அமைச்சரவையா?, ஹாடியின் கண்டிக்கத்தக்க கருத்து

 

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அமைச்சரவையில் முஸ்லிம் அல்லாதவர்களின் பொறுப்பு மற்றும் அந்தஸ்து குறித்துக் கூறியுள்ள கருத்து கண்டிக்கத்தக்கது. இந்நாட்டுச் சுதந்திரம் மற்றும் மேம்பாட்டுக்குப் போராடிய அனைத்துச் சமயங்களைச் சார்ந்தவர்களின் தியாகங்களையும், உழைப்பையும் அவர் இழிவுபடுத்துவதாகப் பொருள்படுகிறது.

 

இந்நாட்டில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் உழைக்கலாம், உண்ணலாம். அவர்களுக்கு வேறு எந்த உரிமையும் இல்லை என்பதனைப் போல் உள்ளது பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் கூற்று என்றார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

நாட்டின் கொள்கை அமலாக்கத்தில் முழுமையாக இஸ்லாமியர் அல்லாதாரைக் கொண்ட அமைச்சரவையையோ இஸ்லாமியர்களை மட்டும் கொண்ட அமைச்சரவையையோ பங்குகொள்ள அனுமதிப்பது என்ற சமயப் பாகுபாடுகள் நாட்டிற்கு ஏற்புடையதல்ல. நாட்டின் முக்கியப் பணிகளிலிருந்து சமய ரீதியாகத் தனிநபரையோ, அமைச்சரவையையோ ஒதுக்கி வைக்கும் ஒரு கலாச்சாரம் இந்நாட்டிற்குச் சற்றும் ஏற்புடையதல்ல என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் தனது அறியாமையால் அக்கருத்தை வெளியிட்டுள்ளாரா அல்லது தீவிர மத வெறி அவர் அறிவு கண்களை மறைத்து விட்டனவா என்பதை  அக்கட்சியே தெளிவுபடுத்த வேண்டும்.

 

இந்நாட்டில்  இஸ்லாமியர்களின் அரசியல் உரிமைக்கு வழங்கப்பட்டுள்ள மகுடமாக மாமன்னரும், பிரதமரும் இருக்கும் வேளையில், துணைப் பிரதமர் மற்றும் அமைச்சர் பதவியே இந்நாட்டு இஸ்லாமியர் அல்லாதாருக்கு வழங்கப்பட்டுள்ள உயரிய அரசியல் உரிமைக்கான அங்கீகாரம் என்பதை அறியாதவரா பாஸ் கட்சியின் தலைவர்?

 

அரசியல் சாசனத்தில் இடமிருந்தும் இதுவரை இந்நாட்டில் துணைப் பிரதமராக எந்த இஸ்லாமியர் அல்லாதாருக்கும் பதவி வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டிருப்பது அமைச்சர் அந்தஸ்து மட்டுமே! இஸ்லாமியர் அல்லாதார் இந்நாட்டு கொள்கைகள் மீது கருத்துகளைத்  தெரிவிக்க உள்ள ஒரே உயரிய அரசியல் சபையே, அமைச்சரவைதான்! அதனையும் அழிப்பதா?

 

அந்த அதிகாரத்தையும் பிடுங்க வேண்டும் என்று அவர் கருத்துரைத்திருப்பது இஸ்லாமியர் அல்லாதவர்களிடமிருந்து நாட்டின் அரசியல் உரிமைகளை முற்றாகப் பறிப்பதற்கு ஒப்பாகும் என்றார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

 

ஆட்சியில் இருக்கும் பாரிசான் ஏற்கனவே இப்படிப்பட்ட சில காரியங்களுக்கு அடித்தளமிட்டுள்ளதால் அதனை மேலும் பலப்படுத்தும் ஒரு செயலாகப் பாஸின்  இச்செயல் அமையும் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

மலேசியாவின் கடற்படை தளபதியாகப் பதவியேற்ற முதல் மலேசியரான துன் தனபாலசிங்கத்திற்குப் பிறகு இப்படிப்பட்ட பதவிகளில் ஏன் இஸ்லாமியர் அல்லாதவர் காணப்படவில்லை. போலீஸ், பாதுகாப்புப் படை மற்றும் அரசாங்க இலாக்கா உயர் பதவிகளில் இஸ்லாமியர் அல்லாதவருக்குச் சகலத் தகுதியும் இருந்தும் அவர்களை எந்த இலாக்காவிலும் உயர் பதவி அடைவதிலிருந்து தவிர்க்கும் கொள்கையைப் பாரிசான் அரசு கடுமையாகப் பின்பற்றுவதே அதற்குக் காரணம் எண்பதை மக்கள் அறிவர்.

 

இன்றும்  அரசியல் தொகுதிகள்  சீரமைப்பு என்ற பாணியில் இஸ்லாமியர் அல்லாதாரையும் இஸ்லாமியர்களையும் தனியே பிரித்தெடுத்துத் தொகுதிகள் வரையறுப்பது எதற்காக? குறிப்பாகச் சிலாங்கூரில் தேர்தல் ஆணையம் பாஸ், அம்னோ ஆகிய கட்சிகளின் கைப்பாவையாகச் செயல்படுகிறதா?

 

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி இஸ்லாமியர் அல்லாதாரையும், இஸ்லாமியர்களையும் மிகுதியாகக் கொண்ட தனித்தனித் தொகுதிகளைத் தோற்றுவித்துள்ளது எதற்காக? இம்மாநிலத்தில் இஸ்லாமியர்களை மட்டும் கொண்ட ஓர் அரசாங்கத்தை நிறுவ எண்ணம் கொண்டுள்ளதைத்தானே, அது தெளிவு படுத்துகிறது.

 

ஆக, இப்பொழுது பத்திரிக்கைகளில் வெளியிடப்படும் சமயவாதிகளின் அறிக்கைகளை வெறும்  அறிக்கையாக மட்டும் கருதாமல். நாளைய மலேசியாவை வடிவமைக்க இப்படிப்பட்ட சமயவாதக் கட்சிகளின் திட்டம், கனவு, இலட்சியம் என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ளக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் இது என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.

 

அதனால், இப்படிப்பட்ட சமய, பிற்போக்குவாத அரசியல்வாதிகளிடம் மக்கள் மிக கவனமுடன் செயல் படவேண்டும். நாட்டு மக்களின் எதிர்காலத்தை இப்படிப்பட்டவர்களின் கைகளில் ஒப்படைத்து விட்டு அவர்களிடம் பணயக் கைதிகளாக நமது எதிர்கால சமுதாயம் சிக்காமலிருப்பதை உறுதி செய்வதே அவர்களுக்கு நாம் விட்டு செல்லும் உன்னத பொக்கிஷமாகும் என்றார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்