1எம்டிபிக்கும் பெல்டாவுக்கும் ஆர்சிஐ வேண்டும் என்று கிட் சியாங் கேட்டிருந்தாரே. அதை ஏன் கவனிக்கவில்லை, நஜிப்?

 

பேங்க் நெகாராவுக்கு 1990களில் ஏற்பட்ட அந்நியச் செலாவணி நட்டம் குறித்து விசாரிக்க அரசு விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) வேண்டும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் விடுத்த கோரிக்கையை மட்டும் ஏன் கவனத்தில் எடுத்துக் கொண்டீர் என்று பிரதம்ர் நஜிப்பை டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுள்ளார்.

தற்போதைய 1எம்டிபி மற்றும் பெல்டா ஆகியவற்றில் காணப்படும் ஊழல்கள் குறித்து விசாரிக்க அரச ஆணையம் வேண்டும் என்றும் கிட் சியாங் கேட்டுள்ளார். ஏன் அதற்கு நஜிப் பதில் அளிக்கவில்லை என்று குவான் எங் கேட்கிறார்.

அரசு ஆணையம் வேண்டும் என்று கிட் சியாங் 90 களில், இருபதுக்கும் கூடுதலான ஆண்டுகளுக்கு முன்பு, கோரிக்கை விட்டார்.

90களில் நடந்த நிதி சம்பந்தப்பட்ட ஊழல் மீது விசாரணை நடத்த நஜிப் நடவடிக்கை எடுத்தார். ஆனால், இப்போது நடந்துகொண்டிருக்கும் ஊழல்கள் மீது இல்லை. ஏன் 1எம்டிபி மற்றும் பெல்டா ஆகியவற்றின் மீது ஆர்சிஐ இல்லை என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குவான் எங் இன்று கேள்வி எழுப்பினார்.

அரசியல்வாதிகள், கிட் சியாங் உட்பட, கேட்டுக்கொண்டதற்கு இணங்க போரெக்ஸ் ஆர்சிஐ நடத்தப்பட்டது என்று நஜிப் நேற்று வெளியிட்ட அவரது புத்தாண்டு செய்தியில் கூறியிருந்தார்.

நஜிப் இப்போது போரெக்ஸ் ஆர்சிஐயை நடத்தியது தமது எதிரியாக மாறியிருக்கும் மகாதிர் மீது கவனம் செலுத்துவதற்காக என்று எதிரணியினர் நஜிப்பை சாடி வருகின்றனர்.

1எம்டிபி விவகாரத்தில் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் சட்டத்துறைத் தலைவர் முகமட் அபாண்டி அலி அதை உறுதிபடுத்தியுள்ளார் என்றும் நஜிப் கூறிவருகிறார்.

போரெக்ஸ் விவகாரத்திற்கு மகாதிர், அவரது அன்றையத் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம், அன்றைய நிதி அமைச்சர் டையம் ஸைனுடின் மற்றும் பேங்க் நெகாராவின் நோர் முகம்மட் ஆகியோர் பொறுப்பு என்றால், நஜிப்பும் பொறுப்பேற்க வேண்டும். அதுதான் நாம் பின்பற்றி வரும் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற முறையின் கூட்டுப் பொறுப்புடமையாகும் என்று குவான் எங் மேலும் கூறினார்.