பாஸ் : ‘அரசியலில் வழி தடுமாறுகிறார்’ மஹ்ஃபுஸ்

பொக்கோ செனா எம்பி மாஹ்ஃபுஸ், கட்சியிலிருந்து விலகியது, பாஸ் நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அக்கட்சியின் தலைமை செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக, பாஸ் தலைமையைப் பல்வேறு விமர்சனங்களால் அடிக்கடி எதிர்த்து நின்ற மஹ்பூஸின் செயல்கள் அடிப்படையில் இதனைக் கூறுவதாக அவர் தெரிவித்தார்.

“இது அதிர்ச்சி அளிக்கும் ஒன்றல்ல, நீண்டகாலமாகவே அவர் இதனை அவரின் செயல்பாடுகள் வழி காட்டியுள்ளார்,” என்று இன்று கோத்தாபாருவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

நேற்று மாலை 5.04 அளவில், மின்னஞ்சல் வாயிலாக மாஹ்ஃபூசின் கடிதத்தைத் தாம் பெற்றதாக தக்கியுடின் தெரிவித்தார்.

“தான் கட்சியிலிருந்து விலகுவதற்கு அவர் சில காரணங்களை முன்வைத்தார், ஷரியா நீதிமன்றங்கள் (குற்றவியல் நீதி சட்டம்) சட்டம் 1965 (RUU355) மற்றும் 2018- ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில், கட்சியின் நடுநிலைமை போக்கு மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்று என்பன அவற்றுள் சில.

“அதுமட்டுமின்றி, பாஸ் மக்களைத் தனிமைப்படுத்துவதாகவும் அவர் கருதுகிறார். மேலும், 14-வது பொதுத் தேர்தலில் வெறும் 40 சீட்டுகளை மட்டுமே இலக்கு வைத்திருப்பது மிகக் குறைவானது என்றும் அவர் நினைக்கிறார். அவரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை,” என்று கூறியதோடு, மாஹ்ஃபூஸ் தற்போது அரசியலில் வழி தடுமாறிவிட்டார் என்றார்.

நேற்று, பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான மாஹ்ஃபூஸ் கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார்.

  • பெர்னாமா