கோல கெடா – லங்காவி ஃபெர்ரி கட்டணம் அதிகரித்தது

இன்று தொடக்கம், கோல கெடா – லங்காவி ஃபெர்ரி போக்குவரத்து கட்டணம், 3 ரிங்கிட் அதிகரித்துள்ளது அறிந்து பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

முன்பு பெரியவர்களுக்கு ரிம 23-ஆக இருந்த கட்டணம், இன்று முதல் 26 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. அதேப்போல, சிறுவர்களுக்கான கட்டணமும் 3 ரிங்கிட் அதிகரித்து, தற்போது 20 ரிங்கிட் ஆகியுள்ளது.

கோலப் பெர்லிஸ் – லங்காவி ஃபெர்ரி போக்குவரத்து கட்டணமும் 3 ரிங்கிட் அதிகரித்து பெரியவர்களுக்கு ரிம 21-ஆகவும் சிறுவர்களுக்கு 16 ரிங்கிட்டாகவும் உயர்ந்துள்ளது.

இதனைப் போன்றே, லங்காவியிலிருந்து கோல கெடா மற்றும் கோல பெர்லிஸ் செல்லும் போக்குவரத்து கட்டணமும் உயர்ந்துள்ளது.

இருப்பினும், இந்தக் கட்டண உயர்வு கவுண்டரில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது, ஆன்லைனில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்குப் பழைய விலையே நிலைநிறுத்தப்படும்.

எந்தவொறு முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென கட்டணத்தை உயர்த்தியுள்ள ஃபெர்ரி போக்குவரத்து நிறுவனத்தின் செயல் அதிர்ச்சி அளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

இந்தக் கட்டண உயர்வு லங்காவி சுற்றுலாத் துறையைப் பாதிப்புறச் செய்வதோடு, அதனை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்று இம்ரான், 35, சொன்னார்.

“கட்டணம் 3 ரிங்கிட்தான் உயர்ந்துள்ளது, ஆனால் அதிக உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு இது கடினமான ஒன்று. மேலும், ஃபெர்ரி நிறுவனம் முன்னறிவிப்பு செய்திருக்க வேண்டும்,” என்று நோரினி, 34 தெரிவித்தார்.

இதற்கிடையே, கோல திரெங்கானு ஃபெர்ரி லைன் வென்சர்சின் மேற்பார்வையாளர் அஹ்மாட் அஸிஸான், “அந்த RM3 கட்டண அதிகரிப்பு மேலாண்மைக்கானது, மேலும் ஃபெர்ரி மேலாண்மை மற்றும் கடல்துறை இடையேயான விவாதங்கள் மூலம் அக்கட்டண அதிகரிப்பு ஒப்புக்கொள்ளப்பட்டது,” என்று கூறினார்.

“நாங்கள் நிர்வாகத்தின் உத்தரவின் படியே இதனைச் செய்துள்ளோம். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக டிக்கெட் விலை அதிகரித்ததில்லை, எனவே இந்த RM3 அதிகரிப்பு பாரமான ஒன்றாக இருக்காது என நான் நம்புகிறேன். அதுமட்டுமின்றி, இந்த அதிகரிப்பு தற்போதைய செலவுகளுக்கு உட்பட்டே உள்ளது.

“ஆனால், பயணிகள் இன்னும் 23 ரிங்கிட்டுக்கு ஆன்லைனில் டிக்கெட் வாங்க முடியும். மேலும், லங்காவியைச் சேர்ந்த பயணிகள், கவுண்டரில் தங்கள் அடையாள அட்டைகளைக் காட்டி, RM20 டிக்கெட் வாங்கலாம்,” என்றும் அவர் கூறினார்.