நஜிப் : எதிர்க்கட்சியினர் கபடதாரிகள், ‘டோல் தந்தை’-ஐ ஆதரிக்கின்றனர்

4 டோல் சாவடிகளை மூடி இன்னும் 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில், பிரதமர் நஜிப் எதிர்க்கட்சியினர் மீதான தனது தாக்குதலைத் தொடங்கிவிட்டார்.

நாட்டிலுள்ள டோல் சாவடிகளின் தந்தை என மகாதீரைக் குறிப்பிட்ட அவர், மகாதீருக்கு ஆதரவாக இருக்கும் எதிர்க்கட்சியினரைக் கபடதாரிகள் என சித்தரித்தார்.

“இதுதான் மலேசியாவின் எதிர்த்தரப்பினர், அவர்கள் பாசாங்குத்தனம் கொண்டவர்கள், அவர்கள் மக்களுக்குத் தீங்கு விளைவித்து, சில தரப்பினர் மட்டும் இலாபமடையும் வகையிலான ஒருதலைபட்ச ஒப்பந்தம் செய்த முன்னாள் தலைவர், ‘டோல்களின் தந்தை’யை ஆதரிக்கின்றனர்,” என்று இன்று தனது வலைப்பதிவு இடுகையில் நஜிப் தெரிவித்துள்ளார்.

அப்பதிவில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை, எனினும், இதற்கு முன்னர், டிசம்பரில் நடந்த அம்னோ மாநாட்டில், டாக்டர் மகாதீர் ‘அனைத்து டோல்களுக்கும் தந்தை’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

நள்ளிரவு 12 மணி தொடக்கம், சிலாங்கூர், சுங்கை ராசாவ் மற்றும் பத்து தீகா, கெடா, புக்கிட் காயு ஈத்தாம் மற்றும் ஜொகூரில் கிழக்குக்கரை இணைப்பு நெடுஞ்சாலை (இடிஎல்) ஆகிய நான்கு டோல் சாவடிகளும் மூடப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சியினர் தங்கள் அரசியல் நலனுக்காக அந்த அறிவிப்புகளைத் திசைத்திருப்ப முயற்சிப்பதாக பிரதமர் கூறினார்.

“இன்னும் மோசமாக, சிலர் இந்த டோல் சாவடிகள் அகற்றப்பட்டது, மக்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகக் கூறியுள்ளனர். ஒருவேளை அவர்கள் அந்தப் பகுதியில் டோல் வசூலிப்பினால் ஏற்பட்ட சாலை நெரிசலைப் பார்த்திராமல் இருக்கலாம் அல்லது, இப்போது எத்தனை பேர் டோல் கட்டணம் செலுத்துவதிலிருந்து தப்பியுள்ளனர் என்பதை அறியாமல் இருக்கலாம்,” என நஜிப் கூறினார்.

முன்னதாக, பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஸிசா, அந்த 4 டோல் சாவடிகளும் மூடப்பட்டது பொதுமக்களுக்குச் சுமையைக் கொடுக்கலாம் எனக் கூறியிருந்தார்.

பிளஸ் மலேசியா பெர்ஹாட்டின் சலுகை இழப்பீட்டை அரசாங்கம் இனி பணமாகச் செலுத்தாது என்ற, இரண்டாவது நிதியமைச்சர் ஜொஹாரி அப்துல் கானியின்  கூற்றுக்குப் பதிலளிக்கையில் வான் அஸிசா இவ்வாறு கூறியிருந்தார்.

அதற்கு பதிலாக பிளசால் இயக்கப்படும் மற்ற டோல் சாவடிகளின் கட்டண ஒப்பந்தத்தை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று ஜொஹாரி அப்போது கூறியிருந்தார்.

4 டோல் சாவடிகளை அகற்றும் இந்நடவடிக்கையானது, மற்ற டோல் சாவடிகளில் இருந்து பணத்தைத் திருடுவதற்கு ஒப்பானது என்று வான் அஸிசா கண்டனம் தெரிவித்தார்.

இருப்பினும், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலங்களில் உள்ள டோல்களை அகற்றாமல், கட்டணம் செலுத்தும் நெடுஞ்சாலைகளை உருவாக்கும் எதிர்தரப்பை நஜிப் குறைகூறினார்.

எதிர்க்கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாதவை என்றும் நஜிப்  குற்றம் சாட்டினார்.