மாபுஸுக்கு அவருடைய சமய உறுதிமொழியை நினைவுறுத்துகிறது பாஸ்

பொக்கோக்  சேனா  எம்பி   மாபுஸ்  ஒமாருக்குக்  கடந்த   பொதுத்   தேர்தலில்   அவர்  வேட்பாளராக  நிறுத்தப்பட்டபோது   எடுத்துகொண்ட   சமய (பயா)  உறுதிமொழியை   அவருக்கு   நினைவூட்டுவதாக  பாஸ்  துணைத்  தலைவர்     துவான்  இப்ராகிம்  துவான்   மான்   கூறினார்.

அந்த  உறுதிமொழிப்படி,   அவர்  கட்சியிலிருந்து   விலகினால்  எம்பி  பதவியைவிட்டும்   விலக   வேண்டும்  என்றாரவர்.

“அவர்  பதவி  விலகாவிட்டால்   பதவி   காரணமாகக்  கிடைக்கும்   அவருடைய   வருமானம்  ஹராமாகும்”,  என   துவான்  இப்ராகிம்   சினார்   ஹரியானிடம்  கூறினார்.

சமய  உறுதிமொழியில்   இன்னொன்றும்  உண்டு.  மக்களால்   தேர்ந்தெடுக்கப்பட்ட  ஒரு   பிரதிநிதி   கட்சியை  விட்டு   விலகினால்   அவரின்  மனைவியையும்  மணவிலக்கு   செய்ய  வேண்டும்  என்பதுதான்  அ து.  ஆனால்,  மாபுஸ்  விசயத்தில்   கெடா  பாஸ்   அந்த   நிபந்தனையை  விதிக்கவில்லை.

இவ்விவகாரத்துக்கு   அடுத்த   வாரம்  விடையளிப்பதாக   மாபுஸ்  கூறினார்.

மாபுஸ்   ஞாயிற்றுக்கிழமை    பாஸிலிருந்து    விலகுவதாக     அறிவித்தார். அவர்   அக்கட்சியிலிருந்து   வெளியேறிய   இரண்டாவது   தேர்ந்தெடுக்கப்பட்ட   பிரதிநிதி   ஆவார்.

நவம்பரில்   அக்கட்சியின்   அனாக்  புக்கிட்   பிரதிநிதி   அமிருடின்   ஹம்சா     அதிலிருந்து  விலகி  பெர்சத்துவில்   சேர்ந்தார்.

பாஸுக்கு   ஹரபானுடன்   சேர்ந்து  பணியாற்றும்   எண்ணம்   கொஞ்சம்கூட   இல்லை  என்று    தெரிய வந்ததால்    அதிலிருந்ந்து  விலக   முடிவு   செய்ததாக  அமிருடின்   கூறினார்.

மாபுஸுக்கு  வேறு   கட்சியில்   சேரும்   எண்ணம்   இருக்கிறதா   என்பது   தெரியவில்லை.